
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது குரூப் சுற்றுடன் வெளியேறியதால் தற்போது சொந்த மண்ணில் நடக்கும் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் விரும்புகின்றனர். அதோடு இலங்கை அணியின் மோசமான செயல்பாடுகளை பார்த்த அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தற்போது இடைக்கால பயிற்சியாளராக ஜெயசூரியாவை அறிவித்துள்ளது வீரர்கள் இடையே ஒரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக இன்று துவங்கி நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகியுள்ளது. இந்நிலையில் இலங்கையை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் மகேஷ் தீக்சனா இந்த தொடரில் இந்திய அணிக்கு சவாலான பந்துவீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடிய போது தோனி தனக்கு கொடுத்த அறிவுரைகள் குறித்து தற்போது தீக்ஷனா நெகிழ்ச்சியுடன் பல பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணியில் தோனியின் கீழ் விளையாடும் போது ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். குறிப்பாக எனது பந்துவீச்சிலும் அவர் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமாக திகழ்ந்தார். ஏனெனில் எனது பந்துவீச்சில் ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட்களை அடித்து ரன்களை குவித்தனர்.
மேலும் என்னுடைய பவுலிங் ஆக்சன் மூலம் வேகமாக பந்து வீச முடியும் என்பதால் வேகமாக வீசினால் மீண்டும் மீண்டும் பவுண்டரிகள் சென்று கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாதபோது தோனி என்னிடம் வந்து புல்லர் லென்த்தில் பந்து வீசுமாறு அறிவுறுத்தினார். அப்படி நீங்கள் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்களால் எளிதாக ஸ்வீப் அடிக்க முடியாது என்றும் கூறினார்.
நான் அதே போன்று அவர் கூறியபடி பந்துவீச்சை மாற்றினேன். அதன் பிறகு நிறைய யார்க்கர் பந்துகளை வீச கற்றுக் கொண்டேன். அவரது அறிவுரை எனக்கு மிகவும் உதவியது. போட்டியின் ஆரம்பகட்ட ஓவரிலும் சரி, இறுதி கட்டத்திலும் சரி அவர் கொடுக்கும் பவுலிங் திட்டங்கள் அனைத்துமே சரியாக நடைபெறும். எப்பொழுதுமே தோனி பந்துவீச்சாளர்களின் விருப்பப்படி பந்துவீச விடுவார்.
இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கும் முன்னாள் இந்திய வீரர் – யார் தெரியுமா?
ஒருவேளை நமது திட்டம் சரியாக செயல்படவில்லை என்றால் அவர் ஒரு திட்டத்தை கூறுவார். அப்படி களத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனமாக பார்த்து அதற்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்வார். விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் போது பந்துவீச்சாளராக நமது பணி நிச்சயம் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக இதுவரை 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.