ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியன் அணியானது ஏ பிரிவில் இடம்பெற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை பந்தாடி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
ரிங்கு சிங்கை தாண்டி ஷிவம் துபே இடம்பெற இதுவே காரணம் :
அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது இரண்டாவது போட்டியில் செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறார்கள். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஃபினிஷராக ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிவம் துபே இந்திய அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இப்படி ரிங்கு சிங் முழுமையான ஃபினிஷராக பார்க்கப்படும் வேளையில் அவரை தாண்டி ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க சில காரணங்கள் உள்ளதாகவும் பேசப்படுகிறது.
அந்த வகையில் ஷிவம் துபே ஒரு மித வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு கைகொடுக்க முடியும். அதுதவிர்த்து பேட்ஸ்மேனாகவும் மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியும். இப்படி பந்துவீச்சில் கை கொடுக்கக்கூடிய சாதகம் உள்ளதாலே அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் கூட 4 ரன்களை விட்டுக் கொடுத்த அவர் 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவை தவிர்த்து கூடுதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.
இதையும் படிங்க : உங்களுடைய பிறந்தநாளில் இந்தியாவிற்கு இந்த பரிசை தாருங்கள்.. கேப்டனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ
அதுமட்டுமின்றி இந்திய அணியின் நிர்வாகமும் ஷிவம் தூபேவின் பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவருக்கு தொடர்ச்சியான பந்துவீச்சு பயிற்சிகளை வழங்கி வருகிறது. மேலும் அவரை ஒரு 4 ஓவர்களை வீசும் முழுமையான ஆல்ரவுண்டராக மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இதன் காரணமாகவே ரிங்கு சிங்கை தாண்டி அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



