தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் ரோஹித் சர்மா , விராட் கோலி – தேர்வு செய்யப்படாதது ஏன்?

Rohit-and-Kohli
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி முதலாவது வாரம் வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான மூன்று விதமான இந்திய அணிகளும் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதில் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் தனித்தனியே கேப்டன்கள் நியமிக்கப்பட்டு தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதனை தவிர்த்து ஒயிட்பால் கிரிக்கெட்டான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர்கள் இருவருக்குமே இடம் கொடுக்கப்படவில்லை.

இப்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான ஒயிட்பால் இந்திய அணியில் தங்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று முறைப்படி அவர்கள் இருவருமே கேட்டுக்கொண்டதாலே அவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை என்றும் அடுத்தடுத்து வரும் தொடர்களில் அவர்கள் இடம் பிடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு முகமது ஷமி தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவரது பிட்னஸின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அபிமன்யு ஈஸ்வரனும் முழு பிட்னசுடன் இருந்தால் அவருக்கும் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இதையும் படிங்க : அப்பாடா ஒரு வழியா இப்போவாது அவருக்கு சேன்ஸ் குடுத்தீங்களே.. ரொம்ப சந்தோசம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னதாக இதுவரை நடைபெற்ற எந்தவொரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்களா? என்பதே தற்போது சந்தேகம் ஆகியுள்ளது. ஏனெனில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியையே தற்போது பி.சி.சி.ஐ முன்னிறுத்தி வருவதால் நிச்சயம் அவர்களுக்கே டி20 உலககோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement