2003 உ.கோ’யில் சச்சினின் அந்த சிக்ஸருக்கு பின் இதுதான் வரலாற்றின் சிறந்த இன்னிங்ஸ் – பாராட்டும் ஜாம்பவான்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து அடுத்ததாக நெதர்லாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொதப்பி சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

- Advertisement -

அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி செங்குத்தாக தூக்கி நிறுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அவுட்டான போதிலும் கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒயிட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவின் சரித்திர வெற்றியை உறுதி செய்தார். அதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தது.

சச்சின் – விராட்:
அப்போட்டியில் 2வது ஓவரிலேயே களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் கடைசி நேரத்தில் ஷாஹீன் அஃப்ரிடி போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை பிரித்து மேய்ந்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் பின்னங்காலில் நின்று அவர் பறக்க விட்ட அசால்ட்டான சிக்சர் சிக்ஸர் சச்சின் டென்டுல்கர் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி கைதட்டி பாராட்ட வைத்தது.

MS Dhoni Virat Kohli

குறிப்பாக அது 2011 உலகக் கோப்பை பைனலில் தோனி அடித்த சிக்ஸருக்கு நிகரானது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டினார். அந்த வரிசையில் இணைந்துள்ள ரவி சாஸ்திரி விராட் கோலி அடித்த அந்த சிக்சர் 2003 உலகக் கோப்பையில் சோயப் அக்தரை தேர்ட் மேன் திசைக்கு மேல் சச்சின் டெண்டுல்கர் அடித்த அசால்ட்டான சிக்சருக்கு நிகரானது என பாராட்டியுள்ளார். மேலும் அந்தப் போட்டியில் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சோயப் அக்தர் ஆகியோரை புரட்டி எடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த விளையாடிய சச்சினுக்கு பின் இப்போது விராட் கோலி அதே போன்ற இன்னிங்ஸ் விளையாடியதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தனை வருடங்களாக விளையாடி இந்தியா – பாகிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டிகளை பார்த்த எனக்கு ஹரிஷ் ரவூப்’க்கு எதிராக அடித்த அந்த 2 சிக்ஸர்கள் வரலாற்றில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த சிறந்த ஷாட்டுகளாக தோன்றுகிறது. சொல்லப்போனால் 2003 உலகக் கோப்பையில் சோயப் அக்தருக்கு எதிராக செஞ்சூரியனில் சச்சின் அடித்த சிக்ஸர் மட்டுமே இதனுடன் ஒப்பிட முடியும். அவர்கள் இருவரும் வரலாற்றின் மிகச்சிறந்த 2 இந்திய பேட்ஸ்மேன்கள். அப்போட்டியில் வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், வாசிம் அக்ரம் ஆகியோருக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சில அற்புதமான ஷாட்டுகளை அடித்து விளையாடினார்”

Shastri

“அதற்கு பின் கிங் கோலியின் இந்த இன்னிங்ஸ் தான் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்தது. சொல்லப்போனால் வரலாற்றில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை எதிர்கொண்டு விளையாடிய சிறந்த 2 இன்னிங்ஸ்களாக சச்சின் மற்றும் விராட் கோலி விளையாடியதை நான் குறிப்பிடுவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ப்ராக்டீஸ்க்-காக 42 கி.மீ பயணம். குளிர்ந்த சான்வெஜ். குளிர்ந்த பழங்கள் – ஐ.சி.சி யிடம் புகார் அளித்த இந்திய வீரர்கள்

அவர் கூறுவது போல ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகிய 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட பாகிஸ்தானை அற்புதமாக எதிர்கொண்டு பந்தாடிய விராட் கோலி என்றுமே மறக்க முடியாத அளவுக்கு மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இதன் வாயிலாக பழைய ஃபார்முக்கு பழைய விராட் கோலியாக பழைய பன்னீர் செல்வமாக அவர் திரும்பியுள்ளார் என்பதிலும் சந்தேகமில்லை.

Advertisement