யார் இந்த விக்னேஷ் புத்தூர்? 30 லட்சம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதன் பின்னணி என்ன? – விவரம் இதோ

Vignesh
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து தொடர்ந்து 13 ஆண்டுகளாக சீசனின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த மோசமான சாதனையை நிகழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் மட்டுமே குவித்தது. அடுத்ததாக விளையாடிய சி.எஸ்.கே அணி 19.1 ஓவரிலேயே இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.

சி.எஸ்.கே அணியை அசைத்து பார்த்த 24 வயது இளம்வீரர் :

இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்ட வேளையில் பந்துவீச்சின் போது அறிமுக வீரராக களமிறங்கிய விக்னேஷ் புத்தூர் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரை ஆட்டமிழக்க வைத்த அவர் அறிமுக போட்டியிலேயே இப்படி அசத்தியதால் அவர் குறித்த விவரங்களை ரசிகர்கள் பலரும் தேடி வருகின்றனர். அந்த வகையில் 24 வயதான விக்னேஷ் புத்தூர் குறித்த சில விவரங்களை இங்கே காணலாம். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அவர் மலப்புரம் என்கிற நகரில் வசித்து வருகிறார்.

அவரது தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். எப்பொழுதுமே மும்பை அணி திறமை இருக்கும் வீரர்களை கண்டறிந்து அவர்களை தங்களது அணிக்கு அழைத்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழு இவரது திறனை நேரில் பார்த்து தங்களது அணிக்குள் இணைந்து தொடர்ந்து பயிற்சியினை வழங்கி வந்திருந்தது. அந்த வகையில் தனக்கு கிடைத்த பயிற்சி வாய்ப்புகளில் எல்லாம் ட்ரையல்ஸ் போட்டிகளில் அவர் அசத்தலாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

அதன் காரணமாக அவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த எஸ்.ஏ டி20 லீக் தொடரின் போது எம்.ஐ கேப்டவுன் அணியின் நெட் பவுலராக அங்கு மும்பை நிர்வாகம் அனுப்பி இருந்தது. அங்கும் ரஷீத் கானுடன் இணைந்து தனது திறன்களை வளர்த்துக் கொண்ட விக்னேஷ் புத்தூர் மீண்டும் இந்தியா வந்து டி.ஒய் பாட்டில் டி20 தொடரில் விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : பொட்டு வெச்ச தங்கக்குடம் தோனிக்கு ஃபினிஷிங் கொடுக்காதது ஏன்? சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றியது பற்றி ரச்சின்

இப்படி மும்பை அணியின் நிர்வாகத்தை அடுத்தடுத்து தனது திறனால் ஈர்த்த விக்னேஷ் புத்தூரை 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் மும்பை அணி 30 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகளிலும் அவர் சிறப்பாக செயல்படவே அவரின் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகமும், பயிற்சியாளர்களும் அவரை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கினர். அப்படி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Advertisement