ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
எதிர்புறம் ராகுல் திரிபாதி 2 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே 9, தீபக் ஹூடா 3, சாம் கரண் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 17 (18) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ரன் அவுட்டானார்.
கொண்டாடிய ரசிகர்கள்:
அப்போது சிஎஸ்கே ரசிகர்களின் அபிமான தல தோனி பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தில் “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” என்ற கேப்டன் விஜயகாந்த் பாடலைப் போட்டு அற்புதமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வரவேற்புடன் சிஎஸ்கே ரசிகர்களும் வெறித்தனமாக விசிலடித்து தோனியை வரவேற்றார்கள். அந்த வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய தோனி 19வது ஓவரின் கடைசி 2 பந்தில் ரன்கள் எடுக்கவில்லை.
இருப்பினும் அடுத்த ஓவரில் அவர் பௌண்டரி அல்லது சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ரவீந்தரா 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருடன் 65* (45) ரன்கள் விளாசி ஆட்டத்தை ஃபினிஷிங் செய்தது சில சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் வருடத்திற்கு ஒருமுறை விளையாடும் தோனி ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பைப் பார்ப்பது ரசிகர்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை.
ரச்சின் விளக்கம்:
இந்நிலையில் தோனிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை கொடுக்காதது பற்றி ரவீந்திரா பேசியது பின்வருமாறு. “நீங்கள் வேகத்தில் இருக்கும் போது அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அணிக்காக நீங்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் கவனத்துடன் இருப்பீர்கள். தோனிக்காக ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமும் விசிலும் சத்தமும் அற்புதமானது. அவருடன் முதல் முறையாக களத்தை பகிர்ந்து கொண்டது சிறப்பானது”
இதையும் படிங்க: இழுக்கும் ரசிகர்கள் இதயங்களை வென்ற தோனி நிரூபிக்க ஒன்னுமில்ல.. இந்த 50 சாதனை செய்வாரு.. சித்து பேட்டி
“அந்த நேரத்தில் ரசிகர்களின் உற்சாகத்தைத் தவிர்ப்பது கடினமாக இருந்தது. தோனி கிரிக்கெட்டின் ஜாம்பவான். அவரை ரசிகர்கள் விரும்புகின்றனர். ரசிகர்கள் தோனி போட்டியை ஃபினிஷிங் செய்வதைப் பார்க்க விரும்பினார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதை அனைத்தும் போட்டியை முடிப்பது பற்றியதாகும். தோனி ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக நிறைய போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார். அவர் ஃபினிஷ் செய்ய இன்னும் நிறைய போட்டிகள் வரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



