நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடினர். அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.
யார் இந்த விப்ராஜ் நிகம் :
லக்னோ அணி சார்பாக நிக்கலஸ் பூரான் 75 ரன்களும், மிட்சல் மார்ஷ் 72 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 210 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் அஷுதோஷ் ஷர்மா மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியவரது மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக அந்த அணி கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதம் இருக்கையில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற சாத்தியமே இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி நேரத்தில் எட்டாவது வீரராக களமிறிங்கிய விப்ராஜ் நிகம் 15 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 39 ரன்கள் குவித்து அஷுதோஷ் சர்மாவுடன் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்ததால் அந்த அணி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் 20 வயதான இந்த விப்ராஜ் நிகம் யார்? என்பது குறித்த தேடலும் அனைவரது மத்தியிலும் துவங்கியுள்ளது.
அந்த வகையில் 20 வயதான விப்ராஜ் நிகம் உத்திரப்பிரதேச டி20 லீக்கில் ஆல்ரவுண்டராக விளையாடியவர். அதோடு கடந்த அக்டோபர் மாதம் ரஞ்சி கோப்பையில் விளையாடிய அவர் தனது முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி மொத்தமாக அந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமின்றி சையத் முஸ்டாக் அலி தொடரில் ரிங்கு சிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி நேரத்தில் களமிறங்கி 27 ரன்களை 8 பந்துகளில் அடித்து வெற்றியும் பெற்றுத் தந்துள்ளார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாடுகள் காரணமாக 50 லட்ச ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்த வேளையில் நேற்றைய போட்டியில் பந்து வீசும் போது சற்று சுமாராக செயல்பட்ட அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் 39 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். விப்ராஜ் குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் :
இதையும் படிங்க : இதை என் குரு தவானுக்கு டெடிகேட் பண்றேன்.. லக்னோவை சாய்க்க அந்த பாடம் ஹெல்ப் பண்ணுச்சு.. அசுடோஸ் பேட்டி
19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் அவர் பேட்ஸ்மேனாகத்தான் இருந்தார். படிப்படியாக லெக் ஸ்பின்னும் கற்றுக் கொண்டார். அவருக்கு பேட்டிங் குறித்த ஆழமான புரிதல் உள்ளதால் அவர் பெரிய பெரிய ஷார்ட்டுகளை விளையாட தயங்க மாட்டார். பந்துவீச்சில் கடுமையாக உழைக்கும் அவர் பேட்டிங்கிலும் கைகொடுக்க கூடியவர் தான் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



