ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் லக்னோ அணியை வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய டெல்லிக்கு ஜேக் பிரேசர் 1, அபிஷேக் போரேல் 0, சமீர் ரிஸ்வி 4 ரன்களில் அவுட்டானார்கள். அப்போது சிறப்பாக விளையாட முயற்சித்த கேப்டன் அக்சர் பட்டேல் 22, டு பிளேஸிஸ் 29 ரன்களில் அவுட்டானதால் 65-5 என டெல்லி ஆரம்பத்திலேயே சரிந்தது. அதனால் அந்த அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 34 (22) ரன்கள் விளாசினார்.
அசுடோஸ் அபாரம்:
அவருடன் சேர்ந்து விளையாடிய அசுடோஸ் சர்மா லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி தமது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவருக்கு முக்கிய நேரத்தில் விப்ராஜ் நிகாம் 39 (15) ரன்களை நொறுக்கி திருப்புமுனையை உண்டாக்கினார். அதைப் பயன்படுத்திய அசுடோஸ் 66* (31) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து டெல்லி சாதனை வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் என்பதை வென்றார். இந்நிலையில் இதை தன்னுடைய ஆலோசகர் மற்றும் குருவான ஷிகர் தவானுக்கு அர்ப்பணிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தவானுக்கு அர்ப்பணிப்பு:
மேலும் கடந்த வருடம் பஞ்சாப் அணியில் சில போட்டிகளில் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் ஏற்பட்ட தோல்விகளில் பாடத்தைக் கற்றது இப்போட்டியில் அசத்த உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அசுடோஸ் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடத்திலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டேன். கடந்த வருடம் சில போட்டிகளில் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பைத் தவற விட்டேன்”
இதையும் படிங்க: வெறும் 1 விக்கெட்.. 65/5 டூ 210.. அசுடோஸ் அசாத்திய வெறியாட்டம்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி 8 வருட சாதனை வெற்றி
“அதனால் இந்த வருடம் முழுவதும் ஃபினிஷிங் செய்வது பற்றி கற்பனை செய்து பார்த்தேன். கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றால் ஏதாவது நல்லது நிகழும் என்ற தன்னம்பிக்கைக் கொண்டிருந்தேன். விப்ராஜ் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடுங்கள் என்று அவரிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர் அழுத்தத்தின் கீழ் அசத்தினார். இந்த விருதை என்னுடைய ஆலோசகர் ஷிகர் பாஜிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று கூறினார்.



