1000வது ஒருநாள் போட்டி : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை பற்றி தெரியுமா?

Sachin 1
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 முதல் 12ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. ரசிகர்களின் அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது பிப்ரவரி 6 மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான வலுவான இந்தியாவை கிரண் பொல்லார்ட் தலைமையிலான அதிரடியான வெஸ்ட் இண்டீஸ் சந்திக்க உள்ளது. இந்த இரு அணிகளிலும் உள்ள பல தரமான வீரர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடுவார்கள் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

1000வது போட்டி:
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்தியா களமிறங்குவது 1000வது போட்டியாகும். இதன் வாயிலாக “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி” என்ற வரலாற்று உலக சாதனையை இந்தியா படைக்க உள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் அந்த அணிக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக அஜித் வடேகர் தலைமையிலான இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.

Sachin 1

அதன்பின் கடந்த 1986ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் 100 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்தியா கடந்த 2002ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையில் 500 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. தற்போது ரோஹித் சர்மா தலைமையில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடி புதிய சரித்திரத்தை எழுத உள்ளது.

- Advertisement -

காவியத்தலைவன் சச்சின்:
இந்த 1000 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக போட்டிகள், ரன்கள், அதிக சதங்கள் இப்படி எந்த வகையான முக்கிய சாதனைகளை புரட்டிப் பார்த்தாலும் அந்த இடத்தில் முதல் ஆளாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வருகிறார். இந்தியா கண்டெடுத்த மகத்தான கிரிக்கெட் வீரர்களில் முதல்வரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 166வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார். அதன்பின் படிப்படியாக வளர்ந்து அந்த இளம் வயதிலேயே வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என பல உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை பந்தாடி இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்ற துவங்கினார்.

Sachin

குறிப்பாக 90களில் சச்சின் அவுட்டானால் இந்தியாவின் தோல்வி உறுதி என பல ரசிகர்கள் டிவியை ஆப் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்த சச்சின் டெண்டுல்கர் இந்தியா விளையாடிய 200, 300, 400, 500, 600, 700, 800 போன்ற மைல்கல் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய 804வது போட்டியில் அவர் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இந்தியாவின் மறுபெயர் சச்சின்:
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான 1989லிருந்து ஓய்வு பெற்ற 2012 வரை இந்தியா 638 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த காலகட்டங்களில் இந்தியா விளையாடிய 72.57% ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அத்துடன் அவர் ஓய்வு பெற்றபோது இந்தியா விளையாடிஇருந்த ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 57.58% போட்டிகளில் விளையாடி இருந்தார்.

இதிலிருந்தே இந்திய ஒருநாள் கிரிக்கெட்டின் மறுபெயர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் என எந்தவித தயக்கமுமின்றி கூறலாம். மொத்தமாக இதுவரை இந்தியா விளையாடியுள்ள 999 போட்டிகளில் 463 போடிகளில் இடம் வகித்த சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவன் என்று கூறினால் அது மிகையாகாது.

ஒருநாள் கிரிக்கெட் கடவுள்:
கடந்த 1974முதல் உலகின் பல இடங்களிலும் நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் சர் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் விளையாடியுள்ளார்கள். ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது யாராலும் கனவிலும் கூட நினைக்க முடியாத ஒரு இலக்காக இருந்தது. ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியர் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் அந்த எட்டாத கனியை எட்டிப் பிடித்த சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் விளாசி “ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டராக புதிய வரலாற்றை எழுதினார்”.

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை எப்படி எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற வித்தையை உலகிற்கு எடுத்துக்காட்டிய சச்சினைப் பார்த்து அதன் பின் ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில் என பல வீரர்கள் தற்போது இரட்டை சதங்களை அடித்துள்ளார்கள். இப்படி இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான வீரராக விளங்கும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை 44.83 என்ற சராசரியில் குவித்துள்ளார். இதில் 96 அரை சதங்களும் 49 சதங்களும் அடங்கும்.

Advertisement