காயம் மாதிரி தெரில ! ஏதோ உள்குத்து நடக்குது, ஜடேஜா – ராயுடு விஷயத்தில் முன்னாள் வீரர்கள் சந்தேகம்

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பத்திலேயே 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் விலகிய நிலையில் தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக விளங்கும் எம்எஸ் தோனி தனது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் 4 தொடர்ச்சியான தோல்விகளை பெற்ற சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பும் அப்போதே பாதி பறிபோனது. அதைவிட கேப்டன்ஷிப் அழுத்தம் தனது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்த ஜடேஜா பாதியிலேயே அந்த பொறுப்பை வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கினார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அத்துடன் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர் எஞ்சிய ஐபிஎல் 2022 தொடரிலிருந்து விலகியது ரசிகர்களிடையே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கிடையில் மும்பைக்கு எதிராக 97 ரன்களுக்கு சுருண்ட சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

ஜடேஜா – ராயுடு:
அதைவிட இந்த வருடம் 16 கோடிக்கு வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட தவறியதால் காயம் என்ற பெயரில் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டதாக பலரும் சந்தேகத்துடன் பேசினார்கள். அதிலும் 2021இல் சிறப்பாக செயல்படத் தவறினார் என்பதற்காக இதேபோல காயம் என்ற பெயரில் பெஞ்சில் அமர வைத்து அதன்பின் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட ரெய்னாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வருடம் அவரை ரெய்னாவை போலவே மஞ்சள் உடையில் பார்க்க முடியாது என பல ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் ஜடேஜாவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என மறுப்பு தெரிவித்த சென்னை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் அடுத்த வருடம் ஜடேஜா நிச்சயம் விளையாடுவார் என்றும் உறுதிபடக் கூறினார். அந்த சலசலப்பு முடிவதற்குள் ஐபிஎல் 2022 தொடருடன் ஓய்வு பெறுவதாக 2018 முதல் சென்னைக்காக விளையாடி வரும் அனுபவ நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு ட்விட்டரில் அறிவித்து அரை மணி நேரத்தில் டெலீட் செய்தார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் ராயுடு ஓய்வு பெறவில்லை என்றும் அவரின் பேட்டிங் சுமாராக இருப்பதாக உணர்ந்ததால் அவர் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என்று மீண்டும் காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்தார்.

- Advertisement -

சந்தேகம்:
பொதுவாகவே நெருப்பின்றி புகையாது என்ற பழமொழிக்கேற்ப காயத்தால் ஜடேஜா விலகியதும் அடுத்த சில நாட்களில் ஓய்வு பெறுகிறேன் என்று ராயுடு அறிவித்து மறுத்ததும் சென்னை அணிக்குள் ஏதோ சச்சரவு இருப்பதை தெளிவாக காட்டுவதாக நிறைய கிரிக்கெட் வல்லுனர்கள் பேசுகின்றனர். இதுபற்றி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “ஒரு அணி 2 அல்லது 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லையெனில் ஏதோ நடக்கிறது. அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. களத்தில் ஜடேஜா பெரிய அளவில் காயமடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் அவர் எஞ்சிய தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டார். எனவே ஏதோ ஒன்று அந்த அணிக்குள் நடக்கிறது” என்று கூறினார்.

Sanjay

சென்னையின் இந்தத் தொடர் தோல்விகளுக்கான காரணத்தை பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற முதல் பகுதியில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் ருதுராஜ் அதிகமாக தடுமாறினார். தீபக் சாஹர் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் தோனியின் கேப்டன்சிப் முடிவும் பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது. கேப்டன்ஷிப்புக்காக ஜடேஜாவை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால் தோனி தொடர்ச்சியாக கேப்டனாக இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். மேலும் எப்போதுமே தோல்வி அடைந்தாலும் பெரிய மாற்றங்களையும் செய்யாத சென்னையின் வெற்றி ரகசியம் இம்முறை வேலை செய்யாமல் போய் விட்டது” என்று பேசினார்.

- Advertisement -

ராயுடு மோதல்:
இந்த வரும் 6.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அம்பத்தி ராயுடு 12 போட்டிகளில் 208 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் அவரின் பேட்டிங் பற்றி அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதில் அதிருப்தியடைந்த காரணத்தால் தான் டுவிட்டரில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்ததாகவும் அதன்பின் அவரை அணி நிர்வாகம் சமாதானம் செய்ததால் அரைமணிநேரத்தில் டெலிட் செய்து விட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன. அதற்கேற்றார் போல் குஜராத்துக்கு எதிரான போட்டியில் அவர் நீக்கப்பட்டார்.

Jaffer

இது பற்றி முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தனது கருத்தை தெரிவித்தது பின்வருமாறு. “எனக்கு என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவர் (ராயுடு) கோபமடைந்ததால் திடீரென்று ஓய்வு பற்றிய டிவீட்டை பதிவிட்டு பின்னர் டெலிட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். அடுத்த அரை மணி நேரத்திற்குள் சென்னையின் நிர்வாக இயக்குனர் அது பற்றி விவரிக்க வருகிறார்.

இதையும் படிங்க : சிக்ஸர் மழை. ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்க விடப்பட்ட டாப் 6 சீசன்கள் – லிஸ்ட் இதோ

எனவே ராயுடுவுக்கும் சென்னை அணி நிர்வாகத்திற்குமிடையே ஏதோ கருத்து வேறுபாடும் மோதலும் ஏற்பட்டு தாமாகவே முடிந்துள்ளதாக உணர்கிறேன்” என்று பேசினார்.

Advertisement