சிக்ஸர் மழை. ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்க விடப்பட்ட டாப் 6 சீசன்கள் – லிஸ்ட் இதோ

Six
- Advertisement -

கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று உலக கிரிக்கெட்டின் அடிப்படை இலக்கணத்தையே மாற்றுமளவுக்கு நினைத்து பார்க்காத பிரம்மாண்ட பரிணாம வளர்ச்சியை கிரிக்கெட்டில் கொண்டு வந்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் 90களிலும் 21-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கூட 50 ஓவர்களில் வெறும் 250 அடிப்பதே சிம்ம சொப்பனமாக இருந்தது. அதிலும் 200 – 250 ரன்களை அடித்தாலே அதை சேசிங் செய்வது கடினம் என்ற ஒரு மனப்பான்மை இயற்கையாகவே இருந்தது. அந்த அடிப்படையை ஐபிஎல் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற தொடங்கியது.

IPL

- Advertisement -

ஏனெனில் இதில் 20 ஓவர்களுக்குள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலைமையால் அதிரடியாக விளையாடுவதற்கு புது புது வழிகளையும் ஷாட்களையும் கண்டறிந்த பேட்ஸ்மேன்கள் பவுலர்களை புரட்டி எடுத்து ரன் மழை பொழியத் தொடங்கினர். அதன் காரணமாக 20 ஓவர்களில் 200 – 250 ரன்கள் அசால்டாக வந்த போதிலும் பல தருணங்களில் அதைவிட அசால்டாக சேசிங் செய்யும் அணிகள் வெற்றிகரமாக எட்டிப்பிடித்து வெற்றி வாகை சூடின.

இதில் நிறைய வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவதால் உலக அளவில் ஐபிஎல் வந்தபின் 50 ஓவர்களில் 250 ரன்கள் எல்லாம் சர்வ சாதாரணம் 350 ரன்கள் அடித்தால் தான் வெற்றியை பற்றி யோசிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. இதே பாணியை ரிசப் பண்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதால் அழிவின் விளிம்பில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் இன்று மீண்டும் உயிர்த்தெழ தொடங்கியுள்ளது.

எனவே டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பானதல்ல என்ற நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் எப்படியாவது நிறைய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் பேட்ஸ்மேன்களை புதுசு புதுசாக ஷாட்களை உருவாக்கி சிக்சர்களை மழையாக பொழிய வைக்கிறது. எடுத்துக்காட்டாக அந்த காலத்தில் பெரும்பாலும் வலுவாக நின்று நேராகத்தான் சிக்ஸர்கள் அடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் படுத்துக்கொண்டும், மடக்கி, திருப்பி ஏடாகூடமாக பவுலர்கள் நினைக்காத வகையில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்க விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஏபி டிவில்லியர்ஸ் கூறலாம். அப்படி சிக்சருக்கு பெயர்போன ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் பறந்த டாப் 6 சீசன்கள் இதோ:

- Advertisement -

6. ஐபிஎல் 2014 தொடர் துபாயில் துவங்கி அதன்பின் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. அதில் ஜார்ஜ் பெய்லி தலைமையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பஞ்சாப்பை பதம் பார்த்த கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற்ற அந்த தொடரில் 714 சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் பறக்கவிட்டனர். அதிகபட்சமாக பஞ்சாப் அணிக்காக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 36 சிக்சர்களை விளாசினார்.

Maxwell

5. 2012 ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 எக்ஸ்ட்ரா அணிகள் விளையாடியதால் 10 அணிகள் பங்கேற்ற 75 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த கோப்பைகளை வென்று அசத்திய எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை ஹாட்ரிக் கோப்பையை வெல்ல விடாமல் தோற்கடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா முதல் கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

அதில் 75 போட்டிகள் நடைபெற்றாலும் 732 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆனாலும் கிறிஸ் கெயில் மட்டும் தனியொருவனாக 59 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார்.

4. துபாயில் முழுமையாக நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை முத்தமிட ஆசையுடன் காத்திருந்த ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லியை தோற்கடித்த ரோகித் சர்மாவின் மும்பை 5-வது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

அதில் 60 போட்டிகளே நடைபெற்றாலும் 734 சிக்ஸர்களை பாலைவனமான துபாயில் பறக்கவிட்ட பேட்ஸ்மென்கள் ரசிகர்களை குளிர்வித்தனர். அதிகபட்சமாக மும்பையின் இளம் வீரர் இஷான் கிசான் 30 சிக்ஸர்களை பறக்க விட்டார்.

ishan 2

3. 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை 4-வது முறையாக கோப்பையை வென்றது. அதில் ஷேன் வாட்சன் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய போதிலும் சென்னை தோற்றதை அந்த அணி ரசிகர்கள் காலத்துக்கும் மறக்க முடியாத நிலையில் 60 போட்டிகள் நடைபெற்ற அந்த தொடரில் 784 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டன. அதிகபட்சமாக கொல்கத்தாவுக்கு விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் காட்டடி வீரர் ரசல் 56 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட்டார்.

2. 2018 ஐபிஎல் தொடரில் தடையிலிருந்து மீண்டு வந்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அற்புதமாக செயல்பட்டு பைனலில் ஷேன் வாட்சன் உதவியுடன் ஹைதெராபாத்தை தோற்கடித்து டாடி ஆர்மியாலும் சாதிக்க முடியும் என நிரூபித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது.

Pant 1

அந்த சீசனில் வெறும் 60 போட்டிகளில் 872 சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் சரவெடியாக நொறுக்கினார்கள். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 சிக்சர்களை பறக்கவிட்டார்.

1. தற்போது மும்பை நகரில் ஒவ்வொரு போட்டியிலும் அனல் தெறித்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் மீண்டும் 2012க்கு பின் 74 போட்டிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் இதுவரை 62 போட்டிகளின் முடிவில் 873* சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள வரும் பேட்ஸ்மேன்கள் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைத்து வருகிறார்கள்.

Jos Buttler

சொல்லப்போனால் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் இந்த வருடம் தான் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 37* சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Advertisement