ஐசிசி 2024 டி20 உ.கோ : நியூயார்க்கில் பாகிஸ்தானுடன் மோதல்.. இந்திய அணியின் அட்டவணை இதோ

T20WC Ind vs Pak
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக வரலாற்றிலேயே முதல் முறையாக இம்முறை ஐசிசி டி20 உலகக் கோப்பையின் கணிசமான போட்டிகள் அந்நாட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான முழுமையான அட்டவணையை சர்வதேச வாரியம் ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக துவங்க உள்ள 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய கத்துக்குட்டிகளை தன்னுடைய லீக் சுற்றில் எதிர்கொள்ளும் இந்தியாவின் அனைத்து லீக் போட்டிகளுமே அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஃப்ளோரிடா நகரில் இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது. அத்துடன் மொத்தமாக இம்முறை 16 அணிகளுக்கு பதிலாக 20 கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அர்ஜென்டினா, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகளும் குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள் அணிகள் உள்ளன.

- Advertisement -

இந்த 4 பிரிவுகளில் லீக் சுற்றின் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் 8 அணிகளும் 2,பிரிவுகளாக பிரிக்கப்படும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வகையில் இத்தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இதெல்லாம் டெஸ்ட் மேட்ச்சே கிடையாது.. இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து – டேல் ஸ்டெயின் கருத்து

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் லீக் சுற்று அட்டவணை:
1. ஜூன் 5 : இந்தியா – அயர்லாந்து, நியூயார்க்
2. ஜூன் 9 : இந்தியா – பாகிஸ்தான், நியூயார்க்
3. ஜூன் 12 : இந்தியா – அமெரிக்கா, நியூயார்க்
4. ஜூன் 15 இந்தியா – கனடா, ப்ளோரிடா

Advertisement