ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்க உள்ளது. அதற்கு முன்பாக ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் அணி முத்தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த 2 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.
சல்மான் ஆகா தலைமையில் வெளியிடப்பட்ட அந்த அணியில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் கழற்றி விடப்பட்டனர். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். அதை தவிர்த்து கடந்த 5 வருடங்களில் அவர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்பதே நிதர்சனமாகும்.
விராட் கோலி மாதிரி:
அதனாலேயே 2022, 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்விகளைச் சந்தித்தது. அதனால் பொறுமையிழந்த பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அவர்களை கழற்றி விட்டது. அதில் சல்மான் ஆகா தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
அதன் காரணமாக தற்போது ஆசியக் கோப்பையிலும் அவர்களை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் வாரியம் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர், ரிஸ்வான் ஆகியோருடைய கேரியர் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாபர், ரிஸ்வான் ஆகியோர் தற்போதுள்ள மரியாதையுடன் தாங்களாகவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமது அறிவுறுத்தியுள்ளார்.
மொத்தமாக கிளம்புங்க:
குறிப்பாக இந்தியாவின் விராட் கோலி வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவரைப் போல பாபர், ரிஸ்வான் ஓய்வு பெற வேண்டும் என்று தன்வீர் அகமது அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் இளம் வீரர்களின் வருகையால் இனிமேல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிவிக்கும் தன்வீர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: விராட் கோலியை கழற்றி விட்ட கம்பீர், அகர்கர்.. அந்த கலாச்சாரத்தை நிறுத்திருக்காங்க.. பதான் பாராட்டு
“பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவெனில், உங்களுடைய மரியாதை அப்படியே இல்லை என்று நீங்கள் நினைத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து யோசியுங்கள். உங்களுக்கு விராட் கோலி நம் முன்னே உதாரணமாக இருக்கிறார். எனவே பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோருடைய மரியாதை அவர்களுடைய கையில் தான் இருக்கிறது” எனக் கூறினார்.



