இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் தடுமாறிய அவர் 2012 – 2013க்குப்பின் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். 2016 – 2021 வரை கேப்டனாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் அதன் பின் தடுமாற்றமாக செயல்பட்டார்.
குறிப்பாக 2019க்குப்பின் சதத்தை அடிக்க முடியாமல் தடுமாறிய அவரை பலரும் விமர்சித்தார்கள். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2023 ஆசிய கோப்பையில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ச்சியாக தடுமாறிய அவரால் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை.
அணியே முக்கியம்:
அதன் உச்சமாக கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்தப் போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்த அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமானார். அதிலிருந்து கம்பேக் கொடுத்து இங்கிலாந்தில் விளையாடுவதற்காக விராட் கோலி 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடினார்.
ஆனால் அதற்கு முன்பாகவே அவரை தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக விராட், ரோஹித் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். இந்நிலையில் நட்சத்திர வீரர் என்பதை மட்டும் வாய்ப்பளிக்காமல் 5 வருடங்களாக தடுமாறிய விராட் கோலியை கழற்றி விட்ட தேர்வுக்குழுவின் முடிவு சரியானது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை அணி கலாச்சாரம் முக்கியம்”
பதான் பாராட்டு:
“கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் வரை அவர் அணி கலாச்சாரத்தை தாங்கிப் பிடிப்பார். இங்கே சில வீரர்கள் பெரிய பெயரைக் கொண்டவர் என்பதால் சுமாராக விளையாடிய பின்பும் 3, 4, 5 வருடங்கள் வாய்ப்பு பெற்றார்கள். ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் அந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அஜித் அகர்கரும் அதற்கான பாராட்டை பெறத் தகுதியானவர்”
இதையும் படிங்க: சுப்மன் கில் வேணாம்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பை குடுங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
“இந்திய கிரிக்கெட்டுக்காக அவரும் சிறப்பாக செயல்படுகிறார். இன்று எந்த முடிவும் பயிற்சியாளர் அல்லது தேர்வாளரால் மட்டும் எடுக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விருவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தால் அது சரியாகவே இருக்கும். அந்த வகையில் கம்பீர் அகர்கர் ஆகியோர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரத்தை பின்பற்றுவதாக நம்புகிறேன்” என்று கூறினார்.



