மன்கட் செய்ததற்கு பழி வாங்கலா? இங்கிலாந்தில் இந்திய வீராங்கனையின் உடைமைகள் திருட்டு, புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி

IND vs ENG Womens
- Advertisement -

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 24ஆம் தேதியன்று நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய அந்த அணியின் இளம் வீராங்கனை சார்லி டீன் எதிர்ப்புறமிருந்து பந்து வீசுவதற்கு முன்பாகவே வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தார். ஒரு கட்டத்தில் அனைவராலும் மன்கட் என்று அழைக்கப்பட்ட அந்த வகையான ரன் அவுட் நேர்மைக்குப் புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும் பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்து பந்து வீசினாலும் நோ பால் கொடுத்து அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் வழங்கப்படும் போது பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் ஒரு நியாயமா என்று தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.

அவரது கருத்தில் நியாயமும் இருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதை கடந்த வாரம் ஐசிசியும் ஏற்றுக்கொண்டதை துச்சமாக கருதும் நாசர் ஹூசைன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

திருடப்பட்ட உடைமைகள்:
ஆனால் தோற்காத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகள் அடித்தோம் என்ற விதிமுறையை காட்டி ஏமாற்றி 2019 உலக கோப்பையை வென்றதை விட தீப்தி சர்மா செய்தது மோசமில்லை என்று இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் இங்கிலாந்தினருக்கு பதிலடி கொடுத்தனர். மேலும் தாங்கள் அங்கீகரித்த விதிமுறையை விமர்சிப்பதில் எந்த அர்த்தமுமில்லை என்று எம்சிசி நிர்வாகமும் சவுக்கடி பதிலை வெளியிட்டது. இந்நிலையில் தன்னுடைய உடைமைகளை தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வைத்துவிட்டு அப்போட்டியில் விளையாடிய விட்டு அறைக்குத் திரும்பி சென்ற போது உடமைகள் திருடப்பட்டதாக இந்திய விக்கெட் கீப்பர் வீராங்கனை தானியா பாட்டியா அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “லண்டனில் இருக்கும் மேரியட் ஹோட்டலின் மைடா வாலே நிர்வாகத்தால் எனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் கிடைத்துள்ளது. இந்திய மகளிர் அணியுடன் சமீபத்திய போட்டியில் விளையாடிய போது நான் தங்கியிருந்த பர்சனல் அறைக்குள் யாரோ ஒருவர் வந்து என்னுடைய பை, பணம், பண அட்டைகள், கடிகாரங்கள், நகைகளை திருடி விட்டார்கள். எனவே இங்கு பாதுகாப்பில்லை”

- Advertisement -

“மேலும் இதுபற்றி விரைவான விசாரணையும் தீர்வும் காணப்படும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பார்ட்னராக இருக்கும் இந்த ஹோட்டலில் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. அதிலும் அவர்கள் முன்னேறுவார்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். இதனால் ஜென்டில்மேன்கள் நிறைந்த நாடு மற்றும் நகரம் என்ற பெயருடைய இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் இந்திய வீராங்கனையின் உடைமைகள் திருடப்பட்டதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அத்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் தீப்தி சர்மா செய்த சர்ச்சையான அவுட் காரணமாக இந்தியாவின் மீது இருக்கும் கோபத்தால் ஏதோ ஒரு இங்கிலாந்து ரசிகர் அல்லது நபர் இந்த வேலையை செய்திருக்கக் கூடும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வரும் இங்கிலாந்து வாரியம் தங்களை நம்பி வந்து விளையாடும் வீரர் வீராங்கனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு கவனக்குறைவாக இருந்ததற்கும் ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

இப்படி தானியா பாட்டியாவின் உடமைகள் திருடப்பட்ட செய்திகள் வைரலானதை தொடர்ந்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. இது பற்றி அந்த நிர்வாகம் கூறிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு.

“இதை அறிவதற்காக மன்னிப்பு கேட்கிறோம் தனியா. இதில் மேற்கொண்டு உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் தங்கியிருந்த சரியான தேதிகளுடன் உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்” என்று கூறியுள்ளது. இதனால் விரைவில் அவரது உடைமைகள் திரும்ப கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இந்திய வீராங்கனையின் உடைமைகளை திருடிய அந்த மர்ம நபரை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement