ஆரம்பம் முதலே தெறித்த சாதனைகள் – இமாலய வெற்றியால் 31 வருட சாதனையை உடைத்து தமிழ்நாடு படைத்த புதிய உலக சாதனை

Tamil Nadu Vijay Hazare Jagadeesan
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2022 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நவம்பர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தமிழகம் ஆரம்ப முதலே அதிரடியாக செயல்பட்டு சாதனை மேல் சாதனை படைத்தது. குறிப்பாக தொடக்க வீரர்களாக களமிறங்கி அந்த அணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முதல் ஓவரிலிருந்தே பாவுண்டர்களையும் சிக்சர்களையும் பறக்க விட்ட நாராயன் ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் சிம்ம சொப்பனமாக மாறி 39 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து 416 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற வரலாற்றை எழுதிய அவர்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற கிறிஸ் கெயில் – மர்லான் சாமுவேல்ஸ (375) ஆகியோரது சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனை படைத்தனர். அதில் சாய் சுதர்சன் 19 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 154 (102) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க மறுபுறம் விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன் இரட்டை சதமடித்து 25 பவுண்டரிகள் 15 சிக்ஸர்கள் உட்பட 277 (141) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

மற்றுமொரு உலக சாதனை:
1. அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற அலி ப்ரவுன் (268 ரன்கள்) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்றுச் சாதனையும் படைத்தார்.

2. அது போக இந்த தொடரின் கடைசி 4 போட்டிகளில் ஏற்கனவே சதமடித்திருந்த அவர் இந்த சதத்தையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

3. அப்படி வெளுத்து வாங்கிய இந்த ஜோடிக்கு பின் கடைசி நேரத்தில் இரட்டை கதிர் போல சகோதரர்கள் பாபா அபாரஜித் 31* (32) ரன்களும் பாபா இந்திரஜித் 31* (26) ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 506/2 ரன்கள் குவித்த தமிழ்நாடு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற உலக சாதனை படைத்தது.

4. மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இங்கிலாந்தின் (498/6, நெதர்லாந்துக்கு எதிராக,2022) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையும் தமிழ்நாடு படைத்தது.

- Advertisement -

அந்தளவுக்கு பந்து வீச்சில் தமிழகத்திடம் அடி வாங்கிய அருணாச்சலப் பிரதேசம் மனதளவில் உடைந்தது போல் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது. ஏனெனில் இமாலய இலக்கை நிர்ணயித்த தெம்பில் அனலாகப் பந்து வீசிய தமிழக பந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பம் முதலே திணறிய அருணாச்சல பிரதேசம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 28.4 ஓவரில் வெறும் 71 ரன்களுக்கு பெட்டி பாம்பாக சுருண்டது. அந்த அணியின் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் யாங்போ 17 (48) ரன்கள் சேர்த்தார்.

அந்தளவுக்கு பந்து வீச்சிலும் மிரட்டிய தமிழகம் சார்பில் அதிகபட்சமாக எம் சித்தார்த் 5 விக்கெட்டுகளையும் சிலம்பரசன் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதனால் 435 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற தமிழ்நாடு லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த அணி என்ற சோமர்செட் அணியின் 31 வருட சாதனையை தகர்த்து மற்றுமொரு உலக சாதனையை படைத்தது.

இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டேவோன் அணிக்கு எதிராக சோமர்செட் அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அப்படி சாதனை மேல் சாதனைகளை படைத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்த தமிழ்நாடு இத்தொடரின் எலைட் சி பிரிவில் பங்கேற்ற 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்று வாய்ப்பு உறுதி செய்துள்ளது.

Advertisement