இரட்டைக்குழல் துப்பாக்கியாக சுட்ட தரமான தமிழக வீரர்கள் ! இப்போதாவது திருந்துமா சென்னை நிர்வாகம்

Natarajan Washingtan Sundar Hari Nishanth
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 9-ஆம் தேதியான நேற்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடந்த 17-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை அடியோடு சாய்த்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திக்கிக் திணறி 154/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மொயின் அலி 48 (35) ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 155 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் வர்மா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே சென்னையின் தோல்வி உறுதி செய்தார்.

திணறும் சென்னை:
போதாக்குறைக்கு படுமோசமாக பந்து வீசிக்கொண்டிருந்த சென்னை பந்துவீச்சாளர்களை கடைசி நேரத்தில் புரட்டி எடுத்த ராகுல் திரிப்பாதி 39* (15) ரன்கள் எடுத்து அதிரடியான ஃபினிஷிங் கொடுத்தார். இதனால் 17.4 ஓவர்களிலேயே 155/2 ரன்களை எடுத்த ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியல் 10-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த ஹைதராபாத் அதிலிருந்து மீண்டெழுந்து 8-வது இடத்தை பிடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

- Advertisement -

மறுபுறம் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உறுதுணையாக இருந்த போதிலும் மோசமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக தோல்வியடைந்த சென்னை தொடர்ச்சியான 4-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இரட்டைக்குழல் துப்பாக்கி நட்டு – வாஷி:
முன்னதாக இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற பெயருடன் களமிறங்கிய சென்னையை ஹைதராபாத் பவுலர்கள் அற்புதமாக பந்துவீசி ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்தனர். அதிலும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தின் தரமான வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு சென்னையை மண்ணைக் கவ்வ வைத்தார்கள் என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பாவை 15 (11) ரன்கள் எடுத்திருந்தபோது காலி செய்த வாசிங்டன் சுந்தர் முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் தடுமாறி 4-வது போட்டியில் நிச்சயம் பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் சென்னை தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் எதிர்பார்க்கப்பட்டது போலவே 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிரடியாக 16 ரன்கள் எடுத்து ஹைதராபாத்துக்கு மிரட்டலை கொடுத்தார். அந்த தருணத்தில் பந்துவீசிய தமிழகத்தின் “யார்கர் கிங்” என அழைக்கப்படும் நடராஜன் 5-வது ஓவரை வீசிய நிலையில் முதல் பந்திலேயே அற்புதமான யார்க்கர் பந்தை வீசி ருத்ராஜை கிளீன் போல்டாக்கினார்.

இதனால் 36/2 என சரிந்த சென்னையை மேலும் பதம் பார்த்த இந்த தமிழக பவுலிங் ஜோடியில் அடுத்து வந்த அம்பத்தி ராயுடுவை 27 (27) ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் அவுட் செய்தார். அடுத்து களமிறங்கிய சிவம் துபேவை வெறும் 3 (5) ரன்களில் நடராஜன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். மொத்தத்தில் நேற்றைய போட்டியின் போது ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

திருந்துமா:
அதே சமயம் நேற்றைய போட்டியில் தமிழக வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு சென்னையை தோற்கடித்தது பல தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஏனெனில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை பெயரில் மட்டும் வைத்துக் வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் சமீப காலங்களாக தமிழக வீரர்களுக்கு வாய்பளிக்காமல் புறக்கணித்து வருகிறது. ஆனால் தமிழக வீரர்களின் தரத்தையும் அருமையையும் புரிந்த பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற இதர அணிகள் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்து தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற அனுபவ வீரர்களையும் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் போன்ற நிறைய இளம் வீரர்களையும் வாங்கியது மட்டுமல்லாமல் நேரடியாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பளித்துள்ளன.

அதற்கேற்றார் போல் இந்த வருடம் பெங்களூரு, மும்பை போன்ற இதர அணிகளில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர்கள் யாருமே சோடை போகாமல் அற்புதமாக செயல்பட்டு தமிழ் நாட்டின் பெயரை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் பெருமை சேர்த்து வருகிறார்கள். ஆனால் மறுபுறம் தமிழ் நாட்டின் தலைநகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சென்னை அணியில் ஒரு நட்சத்திர தமிழக வீரர் கூட இல்லை. மேலும் ரசிகர்களிடம் திட்டு வாங்கக் கூடாது என்பதற்காகவே பெயருக்காக நாராயண் ஜெகதீசன், ஹரி நிசாந்த ஆகிய இளம் வீரர்களை வாங்கிய அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து அவர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது கூட அபாரமாக செயல்பட்ட நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் ஜெகதீசன் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் அதே வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடினால் வெற்றி கிடைக்கும் என்பதை அந்த அணியும் நிர்வாகம் புரிந்தும் புரியாதது போல இருந்து வருகிறது.

இதையும் படிங்க : மும்பை அணியின் தூண் கைரன் பொல்லார்டுக்கே எச்சரிக்கை கொடுத்த ரோஹித் சர்மா – எதுக்குன்னு பாருங்க

தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் அந்த அணி நிர்வாகம் இனிமேலாவது திருந்தி தமிழக வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பைக் கொடுத்து பெயரில் மட்டும் சென்னையை வைத்துக்கொள்ளாமல் அணியிலும் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement