சாவி இல்லாத பொம்மையாக ஐபிஎல் அணியில் இடத்தை இழந்து நிற்கும் தமிழக வீரர் – சுயமாக முன்னேற்றமடைவாரா?

Varun
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வார்த்தை கடந்து ரசிகர்கள் எதிர்பாராத பல பரபரப்பான திருப்பங்களை கொடுத்து வருகிறது. இதில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஒரு அணியாக கருதப்பட்ட நிலையில் எதிர்பார்த்தது போலவே முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. ஆனால் முதல் வாரத்தில் முதலிடம் பிடித்திருந்த அந்த அணி அதன்பின் பங்கேற்ற 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 5 தோல்விகளை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் தள்ளாடுகிறது.

KKR Shreyas Iyer

- Advertisement -

நீக்கப்பட்ட வருண்:
தற்போதைய நிலைமையில் எஞ்சியுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற ரன்ரேட் மற்றும் இதர அணிகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய பரிதாப நிலை கொல்கத்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக நேற்று தனது 8-வது போட்டியில் களமிறங்கிய அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பி 4 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை பதிவு செய்தது. அந்த போட்டியில் கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி  அதிரடியாக நீக்கப்பட்டது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு டிஎன்பிஎல் தொடரில் தனக்கென ஒரு பெயரை எடுத்த வருண் சக்ரவர்த்தி கடந்த 2020 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வெறும் 6.84 என்ற அசத்தலான எக்கனாமியில் எடுத்து அனைவரின் கவனத்தை பெற்றார். அதைவிட துபாயில் நடைபெற்று முடிந்த கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஒருபடி மேலே சென்று அவர் 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 6.58 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்தார். அதனால் அவருக்கு அடுத்த மாதமே அதே துபாய் மண்ணில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடும் பொன்னான வாய்ப்பும் கிடைத்தது.

Varun

சாவியில்லா பொம்மை:
ஆனால் அங்கு அவரின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டு 1 விக்கெட் கூட எடுக்காத அவர் அதன்பின் இந்திய அணியில் நீக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை 8.82 என்ற சுமாரான எக்கனாமியில் மட்டுமே எடுத்து சுமாராக பந்து வீசியதால் டெல்லிக்கு எதிரான போட்டியில் கழற்றி விடப்பட்டார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் எனும் சாவி இல்லாததால் அவர் சாதாரண பொம்மையாகிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

- Advertisement -

ஏனெனில் டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் தொடரில் அசத்தலாக செயல்பட்ட அவரை 2020இல் அப்போதைய கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் அதுவும் தனது அணியில் விளையாட வைக்க அந்த அணி நிர்வாகத்திடம் பேசி சம்மதம் வாங்கி ஏலத்தில் எடுக்க வைத்தார். அதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் கேப்டனாக அதுவும் விக்கெட் கீப்பராக இருந்த கொல்கத்தாவில் அசத்திய அவர் 2021இல் கேப்டன்ஷிப் பொறுப்பு இயன் மோர்கனிடம் கை மாறினாலும் கூட மீண்டும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்த காரணத்தால் அதே அற்புதமான பந்து வீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார்.

Varun-chakravarthy

சுயமாக முன்னேற்றமடைவாரா:
அதிலும் பெரும்பாலான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் அவரை பவுண்டரி அல்லது சிக்சர் அடித்தால் உடனே அவரின் அருகே செல்லும் தினேஷ் கார்த்திக் “இப்படி வீசக்கூடாது, கம் ஆன் வருண்” என்பது போன்ற நிறைய நம்பிக்கை வார்த்தைகளை ஊட்டி சிறந்த வழியில் வழிநடத்தி அவரின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றினார். அந்த சமயங்களில் இருவருமே தமிழில் பேசிக்கொண்டு எதிரணிக்கு தண்ணி காட்டி கொல்கத்தாவின் வெற்றிக்கு பங்காற்றிய வீடியோக்களை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

அதன் காரணமாகவே 2022 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கை கூட தக்கவைக்க கொல்கத்தா அணி நிர்வாகம் வருண் சக்கரவர்த்தியை 8 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைத்தது. ஆனால் அவரில்லாமல் முதல் முறையாக அதுவும் இந்தியாவிற்காக டி20 உலக கோப்பையில் விளையாடிய வருண் சக்ரவர்த்தி சாவி இல்லாத பொம்மையைப் போல் அவரின் வழிநடத்தல் இல்லாத காரணத்தால் சுமாராக பந்துவீசினார்.

இதையும் படிங்க : டக் அவுட் ஆன வேகத்துல நேரா ரசல் எங்க போயிருக்காரு பாருங்க – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

அதை விட தற்போது கொல்கத்தா அணியிலும் தினேஷ் கார்த்திக் இல்லாததால் அவரின் பந்துவீச்சு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சரிந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அவரால் தினேஷ் கார்த்திக் இல்லாமல் சுயமாக சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. இருப்பினும் காலத்திற்கும் அனைத்து நேரங்களிலும் சூழல்களிலும் தினேஷ் கார்த்திக் கூடவே வர முடியாது என்பதால் சுயமாக பந்து வீசும் அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைமை வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement