ரஞ்சிக் கோப்பை 2024 : 245* ரன்ஸ்.. தனி ஒருவனாக கெத்து காட்டிய ஜெகதீசன்.. ரயில்வேஸை தெறிக்கவிட்ட தமிழ்நாடு வெற்றி

Ranji trophy
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பையின் 2024 சீசனில் 49வது லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதின. கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழகத்திற்கு யுவராஜ் சிங் முதல் ஓவரிலேயே ராமச்சந்திரன் விமல் குமாரை டக் அவுட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் நாராயன் ஜெகதீசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த பி சச்சின் 33, பாபா இந்திரஜித் 18, விஜய் சங்கர் 4 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள்.

- Advertisement -

முரட்டு வெற்றி:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த பூபதி வைஷ்ணகுமார் தம்முடைய பங்கிற்கு 5வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்களில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த முகமது அலி 5 ரன்னில் அவுட்டானாலும் அதற்கடுத்ததாக வந்த சாய் கிஷோர் தன்னுடைய பங்கிற்கு 59 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஜெகதீசன் கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்து 402 பந்துகளை எதிர்கொண்டு மெகா இன்னிங்ஸ் விளையாடி 25 பவுண்டரி 4 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 245* ரன்கள் குவித்தார். அதனால் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 489 ரன்கள் குவித்த நிலையில் ரயில்வேஸ் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் பாண்டே 3, யுவராஜ் சிங் 2, முகமது கைஃப் 2, கரண் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் அணி தமிழக பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 246 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ப்ரதம் சிங் 92 ரன்கள் எடுக்க தமிழகம் சார்பில் சந்திப் வாரியர் 3, கேப்டன் சாய் கிஷோர் 3, முகமது அலி 2, அஜித் ராம் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் பஸ்பால் இந்தியாவில் செல்லுபடியாகாது.. காரணம் இது தான்.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

அதன் பின் தமிழகம் ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து களமிறங்கிய ரயில்வே முன்பை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது இன்னிங்ஸில் வெறும் 114 ரன்களுக்கு அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மீண்டும் பிரதம் சிங் 29 ரன்கள் எடுக்க தமிழகம் சார்பில் கேப்டன் சாய் கிசோர் 4, அஜித் ராம் 4 விக்கெட்களை எடுத்தனர். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேஸை நொறுக்கிய தமிழகம் சொந்த மண்ணில் முரட்டுத்தனமான வெற்றி பெற்று அசத்தியது.

Advertisement