இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடித்திருந்தது. இருப்பினும் அதன் பின் கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட இந்தியா தோற்காமல் மிரட்டி வருகிறது.
அதனால் இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக விளையாடும் யுத்தியை இங்கிலாந்து கடைபிடித்து வருகிறது.
வேலைக்கு ஆகாது:
அதன் பயனாக நிறைய வெற்றிகளையும் குவித்து வரும் அந்த அணி தற்போது இந்தியாவை தோற்கடிக்க தயாராகியுள்ளது. இருப்பினும் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் அசத்திய இங்கிலாந்து சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின், ஜடேஜா போன்ற தரமான இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக சாதிக்குமா என்பது கேள்விக்குறியாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் புதிய அதிரடியான அணுகுமுறை இந்திய மண்ணில் செல்லுபடியாகாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பஸ்பால் இத்தொடரில் வேலை செய்யாது. ஏனெனில் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது”
“குறிப்பாக இந்தியாவில் முதல் பந்திலிருந்தே பந்து சுழல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதை 2 அணியை சேர்ந்த ஸ்பின்னர்களும் நன்றாக பயன்படுத்துவார்கள். அது போன்ற மைதானங்களில் டாஸ் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாக இருக்கும். எனவே இந்த தொடரில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமையாமல் போனால் மட்டுமே இங்கிலாந்து தாங்கள் நினைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கி வெற்றி காண முடியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தொடர்ச்சியா அடிக்குறாரு.. இந்திய அணிக்கு புதிய மேட்ச் வின்னர் கிடைச்சுருக்காரு.. இளம் வீரரை பாராட்டிய ஏபிடி
அவர் கூறுவது போல இதற்கு முந்தைய காலங்களில் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் தான் தங்களுடைய அதிரடியான அணுகு முறையை பயன்படுத்தி இங்கிலாந்து வெற்றி கண்டது. குறிப்பாக பாகிஸ்தானில் 3 – 0 என்ற கணக்கில் வென்ற போது அங்கிருந்த மைதானங்கள் தார் ரோட் போல இருந்ததாக உலக அளவில் கிண்டலடிக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற மைதானங்கள் இருக்காது என்பதால் இங்கிலாந்து வெல்வது சற்று கடினமாகவே பார்க்கப்படுகிறது.



