வீடியோ : 16 அடி பாயும் குட்டி – தந்தையை மிஞ்சிய இளம் சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வித்யாசமான உலக சாதனை

- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி தேதி புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதிகப்படியான மழையால் முதலிரண்டு நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை 447/6 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே சுமாராக பந்து வீசிய ஜிம்பாப்வே பவுலர்களை நங்கூரமாக எதிர்கொண்ட தொடக்க வீரர்கள் கேப்டன் க்ரைக் ப்ரத்வெய்ட் – தக்நரேன் சந்தர்பால் ஆகியோர் 336 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். அந்தளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்த அந்த ஜோடியில் ப்ரத்வெய்ட் 18 பவுண்டரியுடன் 182 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருக்கு பின் கெயில் மேயர்ஸ் 20, ரைபர்ஸ் 2, ப்ளாக்வுட், ராஸ்டன் சேஸ் 7, ஜேசன் ஹோல்டர் 11 என முக்கிய வீரர்களில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அசத்தும் இளம் சந்தர்பால்:
ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் ஜிம்பாப்வே அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய தக்நரேன் சந்தர்பால் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி 16 பவுண்டரி 3 சிக்சருடன் 207* (467) ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக ப்ரண்டன் மவுட்டா 5 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் அவர்களது மகனான தக்நரேன் சந்தர்பால் சமீப காலங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ஒருமுறை தனது தந்தையுடன் இணைந்து அவர் பேட்டிங் செய்தது உலக அளவில் வைரலானது. அந்த வகையில் 53 உள்ளூர் போட்டிகளில் 3211 ரன்களை 38.22 என்ற சராசரியில் எடுத்து அசத்தியதால் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட அவர் அறிமுகப் போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார். அதை விட தனது தந்தையைப் போலவே பேட்டிங் செய்ய களமிறங்கியதும் பெயில்ஸை எடுத்து பேட்டிங் கார்ட்டை உருவாக்கி தனது தந்தையைப் போலவே வித்தியாசமான பேட்டிங் ஸ்டேன்ஸை பின்பற்றி நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவிக்கும் அவருடைய பேட்டிங் ஸ்டைல் பார்ப்பதற்கு அச்சு அசல் சிவ்நரேன் சந்தர்பால் போலவே இருப்பதை பார்த்து அனைத்து ரசிகர்களும் வியந்து போனார்கள்.

- Advertisement -

அந்த வகையில் ஜூனியர் சந்தர்பால் என்று ரசிகர்களிடம் பெயர் வாங்கியுள்ள அவர் முதல் முறையாக இப்போட்டியில் சதமடித்து அதை இரட்டை சதமாக மாற்றியுள்ளார். அவரது தந்தை ஏற்கனவே 30 சதங்களும் 2 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த தந்தை – மகன் ஜோடி என்ற வித்தியாசமான உலக சாதனையை பாகிஸ்தானின் ஹனிப் – சோயப் முகமது தந்தை மகன் ஜோடியுடன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அத்துடன் தனது முதல் இரட்டை சதத்தை அடிப்பதற்கு சிவ்நரேன் சந்தர்பால் 136 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்ட நிலையில் அவரது மகன் வெறும் 5வது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்துள்ளார்.

இதை பார்க்கும் போது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது ஓப்பனிங் ஜோடி என்ற சாதனையையும் க்ரைக் ப்ரத்வெய்ட் உடன் இணைந்து அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜெயசூர்யா – அட்டப்பட்டு : 335 (686), கண்டி, 2000
2. தக்நரேன் சந்தர்பால் – க்ரைக் ப்த்வெய்ட் : 336 (685), புலவாயோ, 2023*

இதையும் படிங்க: வீடியோ : ஆஷஸ் கோப்பையை விட இந்தியாவை தோற்கடிப்பதே பெரிய சாதனை – 6 நட்சத்திர ஆஸி வீரர்கள் வெறியுடன் பேட்டி

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் ஜோடி என்ற புதிய சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. தக்நரேன் சந்தர்பால் – க்ரைக் ப்த்வெய்ட் : 336, ஜிம்பாப்வேவுக்கு எதிராக, புலவாயோ, 2023*
2. தேஸ்மண்ட் ஹேய்ன்ஸ் – கோர்டன் க்ரீனிட்ஜ் : 298, இங்கிலாந்துக்கு எதிராக, செயிண்ட் ஜான்ஸ், 1990

Advertisement