- Advertisement -

டி20 உ.கோ’யை பாகிஸ்தான் பேர்ல எழுதுங்க – திடீரென பாக் ரசிகர்கள் கொண்டாட்டம், காரணம் இதோ

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்ல உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் களமிறங்கின. கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்ற தலா 4 போட்டிகளில் 3 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்து முதலிரண்டு இடங்களைப் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றன.

மறுபுறம் அடி வாங்குவதற்காகவே சென்றதை போல் செயல்பட்ட வங்கதேசம் 4 போட்டிகளிலும் தோற்று ஏமாற்றமாக வெளியேறியது. அந்த நிலையில் இத்தொடரின் மாபெரும் இறுதி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 14 (17) ஃபின் ஆலன் 12 (6) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

- Advertisement -

மிரட்டிய பாகிஸ்தான்:
அதனால் 47/2 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (38) ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் கிளென் பிலிப்ஸ் 29 (22) மார்க் சாப்மேன் 25 (19) ஜேம்ஸ் நீசம் 17 (10) என அடுத்து வந்த முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானதால் ஒரு கட்டத்தில் 180 – 200 ரன்களை அடிக்கும் நிலையில் இருந்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 163/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு கடைசி நேரத்தில் அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 169 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 15 (14) உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் முஹமது ரிஸ்வான் 34 (29) ஷான் மக்சூட் 19 (21) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர். அதனால் 11.3 ஓவரில் 74/3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கி 4வது விக்கெட்டுக்கு முகமத் நவாஸ் உடன் முக்கியமான 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திய ஹைதர் அலி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (15) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அந்த சமயத்தில் வந்த ஆசிப் அலி 1 (2) ரன்னில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய இப்திகர் அஹமத் 1 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 25* (14) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக நின்ற முகமது நவாஸ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38* (22) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.3 ஓவரிலேயே 168/5 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த முத்தரப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

- Advertisement -

ரசிகர்கள் கொண்டாட்டம்:
மறுபுறம் சொந்த மண்ணில் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் மண்ணை கவ்விய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்த மைக்கேல் ப்ரெஸ்வெல் இத்தொடர் முழுவதும் கலக்கியதால் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆனால் உலக கோப்பை துவங்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் பாகிஸ்தான் பதிவு செய்துள்ள வெற்றி அந்நாட்டு ரசிகர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படுத்தி கொண்டாட வைத்துள்ளது.

குறிப்பாக அந்த அணியின் பந்து வீச்சு ஷாஹீன் அப்ரிடி திரும்புவதால் மேலும் பலமடையும் நிலையில் பாபர் – ரிஸ்வான் ஆகியோரால் டாப் ஆர்டர் ஏற்கனவே பலத்துடன் உள்ளது. ஆனாலும் பலவீனமான மிடில் ஆர்டர் மட்டுமே சமீபத்திய ஆசிய கோப்பையிலும் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் தோல்வியை பரிசளித்தது.

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அந்த அணியின் மிடில் ஆர்டரில் நவாஸ் மற்றும் இப்திகர் அஹமத் ஆகியோர் இப்படி கடைசி நேரத்தில் கோப்பையை வெல்லும் அளவுக்கு அற்புதமாக செயல்பட்டு பார்முக்கு திரும்பியுள்ளது உண்மையாகவே பாகிஸ்தானை முழுமையான வலுவான அணியாக மாற்றியுள்ளது. இதனால் 2009க்குப்பின் 2வது டி20 உலகக் கோப்பையை தங்களது பெயரில் எழுதுமாறு இப்போதே அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெம்பாக பேசுகிறார்கள்.

- Advertisement -
Published by