ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது. அத்தொடருக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக லீக் சுற்றில் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி வெளியேறியது.
அடுத்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் பேட்டை வைத்து இந்தியாவை துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாட்டினார். மேலும் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையாக செய்து காட்டி கலாய்த்தார். அதற்கெல்லாம் களத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானுக்கு தோல்விகளைப் பரிசாக கொடுத்து பதிலடி கொடுத்தது.
இந்தியாவுக்கு என்னவாயிற்று:
இறுதியில் பாகிஸ்தானை சேர்ந்த தலைவர் மோசின் நக்வி கைகளால் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது. அதனால் ஏமாற்றமடைந்த அவர் ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்றார். அதற்காக அசராத இந்திய அணி கையில் கோப்பையை வைத்திருப்பது போல் கொண்டாடி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் விளையாட்டில் அரசியலை கலக்கும் அளவுக்கு தற்போதைய இந்திய அணிக்கு என்னவாயிற்று? என்று 1983 உலகக் கோப்பையை வென்ற முன்னாள்வீரர் சயீத் கிர்மானி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது விளையாடப்படும் கிரிக்கெட்டில் ஜென்டில்மேன்ஷிப் பெரிதாக பார்க்க முடியவில்லை. அங்கே மிகவும் திமிராகவும் மூர்க்கத்தனமும் காணப்படுகிறது”
அரசியல் வேண்டாம்:
“நான் ஆசியக் கோப்பையை மட்டும் சொல்லவில்லை. இந்திய அணிக்கு என்னவாயிற்று? களத்தில் ஏன் அரசியல் விளையாடப்படுகிறது? என்னுடைய நண்பர்களிடமிருந்து அது பற்றிய கருத்துக்களைக் கேட்கும் போது எனக்கு வெட்கமாக இருக்கிறது. குறிப்பாக உங்களுடைய காலம் வித்தியாசமானது. நீங்கள் ஜென்டில்மேன் போல விளையாடினர். ஆனால் இப்போதைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? என்று எனது நண்பர்கள் சொல்கின்றனர்”
இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஜெயிச்சது மட்டும் போதாது.. எனக்கு அந்த கோப்பையையும் ஜெயிக்கனும் – திலக் வர்மா பேட்டி
“விளையாட்டில் அரசியல் ஈடுபடக்கூடாது. அதை பின்னே விடுங்கள். களத்தில் நடைபெறும் விஷயங்களை அங்கேயே விடுங்கள். அதை உங்களுடைய வெற்றியின் அளவு அல்லது கிரிக்கெட்டில் நீங்கள் சம்பாதிக்கும் விஷயங்களுடன் கலக்காதீர்கள். உங்களது சம்பளத்தை அரசியல் நிகழ்வுக்காக அர்ப்பணிக்காதீர்கள் (சூரியகுமாரை சொல்கிறார்). எங்களுடைய காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவார்கள். நாங்கள் பாகிஸ்தான் செல்வோம். அப்போதெல்லாம் நல்ல விருந்தோம்பலும் அன்பும் ஆதரவும் இருந்தன. எனவே ஒரு கிரிக்கெட்டராக நான் எனது தலையை கீழே விடுகிறேன்” என்று கூறினார்.



