உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே அசத்திய 19 வயது இளம் வீரர் – ஐபிஎல் வரலாற்றில் அரிதான சாதனை

Suyash Sharma
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் கடுமையாக போராடி 204 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 57 (43) ரன்கள் எடுத்தும் எதிர்ப்புறம் வெங்கடேஷ் ஐயர் 3 மந்திப் சிங் 0, கேப்டன் நித்தீஷ் ராணா 1, ஆண்ட்ரே ரசல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 89/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை அடுத்ததாக களமிறங்கி 6வது விக்கெட்டுக்கு 12 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய ஷார்துல் தாகூர் யாருமே எதிர்பாரா வகையில் 20 பந்தில் தன்னுடைய முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து 9 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (29) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அவருடன் தனது பங்கிற்கு அசத்திய ரிங்கு சிங் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 (33) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

நேரடியாக சாதனை:
அதை தொடர்ந்து 205 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த விராட் கோலி 21 (18) ரன்களில் சுனில் நரேன் சுழலில் அவுட்டாக டு பிளேஸிஸ் 23 (12) கிளன் மேக்ஸ்வெல் 5, ஹர்ஷல் படேல் 0 என இதர வீரர்கள் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி சுழலில் சொற்ப ரன்களில் போல்டாகி சென்றனர். அதனால் 83/6 என தடுமாறிய பெங்களூருவை கடந்த சீசனை போல அதிரடியாக காப்பாற்ற முயற்சித்த தினேஷ் கார்த்திக்கை 9 (8) ரன்களில் அவுட்டாக்கிய இளம் ஸ்பின்னர் சூயஷ் ஷர்மா அனுஜ் ராவத்தையும் 1 (5) ரன்னில் காலி செய்தார்.

அதனால் 17.4 ஓவரிலேயே 123 ரன்களுக்கு பெங்களூருவை சுருட்டி அதிரடி வெற்றி கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளையும், சூயுஷ் சர்மா 3 விக்கெட்களையும், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் 205 ரன்களை கட்டுப்படுத்த களமிறங்கிய போது வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் சூயஷ் சர்மாவை கொல்கத்தா அணி இம்பேக்ட் வீரராக தேர்வு செய்தது. அதில் ஆச்சரியம் என்னவெனில் இதற்கு முன் அவர் முதல் தரம், லிஸ்ட் ஏ, டி20 உட்பட எந்த விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார்.

- Advertisement -

குறிப்பாக டென்னிஸ் பந்து போன்ற கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மட்டுமே கணிசமாக விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக கொல்கத்தா அணி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட உள்ளூர் வீரர்கள் தேர்வு முகாமில் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை காண்பித்துள்ளார். அதில் கவரப்பட்ட கொல்கத்தா பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அவரை தேர்வு செய்து இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டு 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த சூயுஷ் சர்மா ஐபிஎல் வரலாற்றில் முதல் தரம், லிஸ்ட் ஏ, டி20 போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடாமலேயே நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கி தனது அறிமுகப் போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற அரிதான புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அவரைப் போலவே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய சிவம் சர்மா தன்னுடைய அறிமுக போட்டியிலே பெங்களூருக்கு எதிராக 26 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IPL 2023 : பெங்களூருவை சுழலில் சுருட்டிய கொல்கத்தா, சிஎஸ்கே’வின் 11 வருட சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை

அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த முதல் இம்பேக்ட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ள சூயஸ் சர்மா சமூகவலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

Advertisement