லண்டனுக்கு அனுப்பி எனக்கு உதவி செய்த ஆர்.சி.பி அணிக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் – சுயாஷ் சர்மா நெகிழ்ச்சி

Suyash Sharma
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் கழற்றி விட்டிருந்தது. அதன் பின்னர் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு இருந்த அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 2 கோடியே 60 லட்சம் என்கிற தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. அப்படி பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவரை முதல் போட்டியிலிருந்து பெங்களூரு அணி முதன்மை சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தி வருகிறது.

ஆர்.சி.பி அணி செய்த உதவியை மறக்கமாட்டேன் : சுயாஷ் சர்மா

அப்படி பெங்களூரு அணியில் ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், க்ருனால் பாண்டியா, சுயஷ் சர்மா ஆகியோர் இணைந்துள்ள புதிய பௌலிங் யூனிட் அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளதோடு வெற்றிகளையும் குவித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரில் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ள பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வேளையில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி.

- Advertisement -

கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் ஆர்சிபி அணிக்கு இந்த ஆண்டு கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக பலரது மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரின் ஒன்பது போட்டியில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு பின்னர் ஆர்சிபி அணி தனக்கு செய்த உதவி குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நான் போட்டிகளுக்கு முன்பாக ஊசி போட்டுக் கொண்டுதான் விளையாடி வந்தேன். எனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பது இந்தியாவில் உள்ள மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

- Advertisement -

மெகா ஏலத்திற்கு பின்னர் என்னை அழைத்த ஆர்.சி.பி அணி எனது பிட்னஸை பரிசோதிக்கும் போது எனக்குள்ள பிரச்சனையை கண்டறிந்து மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நடத்தப்பட்ட சிகிச்சைக்கு பிறகு நான் காயத்தில் இருந்து பூரணமாக குணமடைய தாமதமாகும் என்று நினைத்தேன். ஆனால் உரிய காலத்தில் என்னை மீட்டெடுத்து இந்த தொடரில் விளையாட வைத்தது அனைத்துமே ஆர் சி பி அணியின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் தான்.

இதையும் படிங்க : எல்லாம் சாதிச்ச தோனி 2026இல் விளையாடுனா ஆச்சர்யப்படுவேன்.. சிஎஸ்கே’வுக்கு அவரே போதும்.. ஷான் பொல்லாக்

தற்போது நான் எந்த வலியும் இன்றி மிக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எனக்கு இப்படிப்பட்ட ஒரு உதவியை செய்த ஆர்.சி.பி அணிக்கு என்றும் நன்றி கடமை பட்டுள்ளேன் என சுயாஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement