ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 49வது போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 10 போட்டிகளில் சிஎஸ்கே 2 வெற்றி 8 தோல்விகளைப் பதிவு செய்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே இந்த வருடம் லீக் சுற்றுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
அத்துடன் 2024, 2025 என வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது. இதுபோக சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னை அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பொறுப்பதற்கு பெயர் போன சிஎஸ்கே இந்த வருடம் இப்படி திணறுவதைப் பார்த்து சென்னை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2026இல் தோனி:
இதற்கிடையே 43 வயதாகும் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்றும் தோனி தெரிவித்துள்ளார். அதனால் தோனி அடுத்த வருடம் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.
அது பற்றி நேற்றைய போட்டியில் கேட்ட போது “அடுத்தப் போட்டிக்கு விளையாட வருவேனா என்பதே தமக்குத் தெரியாது” என தோனி ஜாலியாக பதிலளித்தார். இந்நிலையில் அனைத்தையும் சாதித்த தோனி 2026 ஐபிஎல் தொடரில் அதுவும் கேப்டனாக விளையாடினால் அதைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ஏனெனில் சிஎஸ்கே அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பும் திறமையை ருதுராஜ் கொண்டிருப்பதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
ஜாம்பவான் கருத்து:
“அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்கு தோனி தேவைப்படுவார் என்று நான் கருதவில்லை. ருதுராஜ் காயத்தை சந்தித்ததாலேயே அவர் கேப்டனாக இருக்கிறார். தோனி இனிமேலும் சாதிக்க எதுவுமில்லை. வெற்றிகரமானவர்களைப் போல அவரும் அனைத்தையும் சாதித்து விட்டார். சிஎஸ்கே அணியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் மரபு காரணமாக தோனி அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான சுதந்திரத் தன்மையை சென்னை நிர்வாகம் கொடுத்திருக்கலாம்”
இதையும் படிங்க: அங்க தான் சிஎஸ்கே லாக் ஆகிட்டாங்க.. 2026இல் அஸ்வினை கழற்றி விட்டா தான் ஜெய்க்க முடியும்.. சஞ்சய் பங்கர்
“எனவே தோனி போதுமான அளவுக்கு விளையாடி விட்டார் என்பதை சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துவிட்டார்களா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவரிடம் உரிமையாளர்கள் ஓய்வு பற்றி பேசினார்களா? என்பது குறித்து நாம் நீண்ட காலமாக கணித்து வருகிறோம். அதைப் பற்றி தேய்ந்து போன ரெகார்ட் போல பேசிய நம்மால் அதனுடைய அடிப்பகுதியை கணிக்க முடியவில்லை. ஆனால் ஆம் அடுத்த வருடம் தோனி அங்கே இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறினார்.



