
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா இத்தொடரில் பாகிஸ்தானை 3வது முறையாக தோற்கடித்தது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த அவருடைய கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அதனால் அவமானப்பட்ட நக்வி இந்தியா எப்படி வெற்றியை கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து விடுகிறேன் என்ற வகையில் கோப்பையை கையோடு எடுத்துச் சென்று விட்டார். மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவரான அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி மைதானத்தில் காத்திருந்தனர்.
ஆனால் 45 நிமிடங்கள் கழித்து இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதற்காக ஏமாற்றமடையாத இந்திய அணி கையில் கோப்பையை வைத்திருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் தலைவர் கையால் மட்டுமே கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி முடிவெடுத்து சொன்னதாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை செய்யாத நக்வி கோப்பையை கையோடு எடுத்துச் சென்று ஓடி விட்டதாகவும் சூரியகுமார் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் கதவை மூடிக்கொண்டு அறைக்குள் உட்கார்ந்து இருக்கவில்லை. நாங்கள் பரிசளிப்பு விழாவில் யாரையும் காத்திருக்கவும் வைக்கவில்லை. அவர்கள் கோப்பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்”
“அதையே நாங்களும் பார்த்தோம். ஆனால் சிலர் எங்களைப் பற்றி வேறு விதமாக வீடியோ உருவாக்குகின்றனர். உண்மையில் நாங்கள் களத்திலேயே இருந்தோம். உள்ளே செல்லவில்லை. மேலும் அவர் கொடுத்தால் கோப்பையை வாங்கக்கூடாது என்று அரசு அல்லது பிசிசிஐ சார்பில் யாரும் எங்களிடம் சொல்லவில்லை. அதை நாங்கள் களத்தில் எங்களுடைய சொந்த வழியில் எடுத்தோம்”
இதையும் படிங்க: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?
“அவர்கள் மேடையில் நின்றார்கள். நாங்கள் கீழே நின்றோம். அவர்கள் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தனர். அது பற்றிய விவரம் எனக்கு தெரியாது. தாமதமானதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது தான் அவர்களுடைய ஒரு பிரதிநிதி கோப்பையை எடுத்துக்கொண்டு ஓடுவதை நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கோப்பையை கொடுக்காமல் வெளியேறிய மோசின் நக்வி மேல் ஐசிசியிடம் புகார் செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.