இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸை 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தியும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது. எனவே ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டு இத்தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.
அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 போட்டிகளில் அறிமுகமானது முதலே பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்டுள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை மிஞ்சி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.
அதிவேக சூர்யகுமார்:
குறிப்பாக எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்களால் உருண்டு புரண்டு சிக்சர்களை அடிக்கும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளை பெற்று குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் ஜொலித்து வருகிறார். மேலும் கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவர் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தடுமாறிய போதிலும் ஐபிஎல் 2023 தொடரில் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.
அதனால் இப்போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இன்னும் 3 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை பறக்க விட்ட 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 182
2. விராட் கோலி : 117
3. கேஎல் ராகுல் : 99
4. சூரியகுமார் யாதவ் : 97*
5. யுவ்ராஜ் சிங் : 74
அதை விட ரோகித் சர்மா 140 இன்னிங்சில் 182 சிக்ஸர்களும் விராட் கோலி 107 இன்னிங்சில் 117 சிக்ஸர்களும் கேஎல் ராகுல் 68 இன்னிங்ஸில் 99 சிக்ஸர்களும் அடித்துள்ள நிலையில் சூரியகுமார் யாதவ் வெறும் 47 இன்னிங்சிலேயே 97 சிக்ஸர்களை அடித்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் இன்னும் 3 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை தூளாக்கி சூரியகுமார் புதிய வரலாறு படைப்பார்.
சொல்லப்போனால் கடந்த வருடம் மட்டும் 68 சிக்ஸர்கள் அடித்த அவர் உலகிலேயே ஒரு குறிப்பிட்ட காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அதனால் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர் ஒருவேளை இப்போட்டியில் இல்லையென்றாலும் கூட இந்த தொடருக்குள் இன்னும் 3 சிக்ஸர்களை அடித்தாலே இந்த அதிவேகமான சரித்திர சாதனையை படைப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.
இதையும் படிங்க:IND vs WI : இன்றைய 2 ஆவது போட்டியில் டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா கேப்டன் பாண்டியா – இந்த முடிவை தான் எடுப்பாரு
இதைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது போட்டியில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு திருப்பும் முனைப்புடன் சூரியகுமார் யாதவ் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.