
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள மிக பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணி விளையாடும் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை கொடுக்கவில்லை. அதேபோன்று டாஸ்க்கு சென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவும் பாகிஸ்தான் கேப்டனிடம் கை கொடுக்கவில்லை. இந்த விவகாரம் அப்போதே பெரியளவில் பேசப்படும் விடயமாக இருந்தது.
அதோடு ஆசிய கோப்பையை மோசின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துவிட்டார். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவோமோ? மாட்டோமா? என்பது உங்களுக்கு தெரிய வேண்டுமா 24 மணி நேரம் காத்திருங்கள். நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக உறங்குங்கள்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை கழட்டி விடாதீங்க.. காரணத்துடன் ஆதரவாக பேசிய சவுரவ் கங்குலி – விவரம் இதோ
நாளைய போட்டியின் போது அனைத்துமே உங்களுக்கு தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரின் போது பின்பற்றிய வழிமுறையை அவர்கள் பின்பற்ற இருக்கிறார்கள் என்றும் நிச்சயம் இந்திய கேப்டனோ, இந்திய வீரர்களோ எந்த ஒரு பாகிஸ்தான் வீரர்களுடனும் கை குலுக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.