
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை ஹாட்ரிக் முறையாக வீழ்த்திய இந்தியா கோப்பையை வென்றது. முன்னதாக அத்தொடரின் இறுதிப்போட்டியில் 146 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில், கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே அவுட்டானார்கள்.
அதனால் 20/3 என இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோரும் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.
அதைப் பயன்படுத்தி அபாரமாக பேட்டிங் செய்த அவர் 69* ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவின் தலையை நிமிர வைத்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா மற்றும் தம்மை போன்றவர்களை உருவாக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி குருகூலம் போன்றது என்று சூரியகுமார் யாதவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2024இல் தென்னாப்பிரிக்காவில் 2 சதங்கள் அடித்த போது திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து விட்டார் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆனால் அவருடைய உண்மையான திறமையை ஆசியக் கோப்பை ஃபைனலில் காண்பித்தார். நான், பும்ரா, திலக், ரோஹித் பாய், பாண்டியா ஆகியோர் இந்தியாவுக்கு விளையாடுவதற்கு முன் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக விளையாடினோம்”
“மும்பை இந்தியன்ஸ் தரமான மாணவர்களை உருவாக்கும் குருகூலம் போன்றது. மும்பைக்காக நாங்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்து முயற்சி செய்கிறோமோ அதையே இந்தியாவுக்காக விளையாடும் போது பிரதிபலிக்கிறோம். எனவே இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன் திலக் ஏற்கனவே தம்மை தயார்படுத்தியிருந்தார். இதற்கு முன் நாம் அழுத்தமான சூழ்நிலைகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது அவருக்குத் தெரியும்”
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 ஆவது அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ
“நானும் அது போன்ற சூழ்நிலைகளைப் பார்த்துள்ளதால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ரிவர்ஸ் ஸ்வீப் திலக்கிற்கு பிடித்த ஷாட் என்பது எனக்குத் தெரியும். அவரால் அதை அடிக்காமல் இருக்கவும் முடியாது. ஆனால் இறுதிப்போட்டியில் அவர் அதை ஒருமுறை கூட அடிக்கவில்லை. அதுவே திலக் இந்த இளம் வயதில் எந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் விளையாடுகிறார் என்பதைச் சொல்கிறது. ஒவ்வொரு பந்தாக விளையாடி போட்டியை முடி என்று இடைவெளியில் கௌதம் பாய் சொன்னதை அவர் செய்தார்” என்று கூறினார்.