முகமது ரிஸ்வான் நெருங்க முடியாத உச்சம் – இங்கேயும் கோலியின் ஆல் டைம் சாதனையை உடைக்க நூலிழையில் காத்திருக்கும் சூர்யகுமார்

Suryakumar Yadav Virat kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்த அந்த தொடரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலமையிலான இளம் அணி 1 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே கோப்பையை வென்றது. இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும் நாலாபுறமும் சுழன்றடித்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அதிரடியான சதமடித்து 111* (51) ரன்கள் விளாசி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

இறுதியில் நடைபெற்ற 3வது போட்டி மழையின் குறுக்கீட்டால் ஆச்சரியப்படும் வகையில் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கோப்பையை வென்ற இந்திய அணி 2024 டி20 உலக கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அப்படி இத்தொடரின் தலையெழுத்தை தீர்மானித்த 2வது போட்டியில் அதிரடியான சதமடித்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்த சூரியகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இங்கேயும் சூர்யகுமார்:

கடந்த வருடம் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் பயமறியாத இளம் கன்றை போல் சீறிப்பாய்ந்து வரும் அவர் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே சரவெடியாக ரன்களை குவித்து மடமடவென குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி சமீபத்திய உலகக் கோப்பையில் சாதனை படைத்தார்.

மேலும் இந்த வருடம் 1000 ரன்கள் கடந்த முதல் பேட்ஸ்மேன், அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற சாதனைகளை அசால்டாக செய்து வரும் அவர் இந்த நியூசிலாந்து தொடரில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதற்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 31 புள்ளிகளை எக்ஸ்ட்ராவாக பெற்றுள்ள அவர் 890 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தை யாராலும் எளிதில் எட்ட முடியாத அளவுக்கு வலுப்படுத்தியுள்ளார். ஏனெனில் 2வது இடத்தில் 836 புள்ளிகளுடன் இருக்கும் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் இடையே 54 புள்ளிகள் வித்தியாசங்கள் உள்ளது.

- Advertisement -

அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆல் டைம் பட்டியலில் 895 புள்ளிகளுடன் 5வது இடத்தை சூரியகுமார் பிடித்துள்ளார். வரலாற்றிலேயே ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 897 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். தற்போது அவரை நெருங்கியுள்ள சூரியகுமார் விராட் கோலியை முந்துவதற்கு இன்னும் 3 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுவதால் விரைவில் இந்த சாதனையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த வருடம் சக்கை போடு போட்டு வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை என்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனைகளை இந்த நியூசிலாந்து தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் முறியடித்தார். அந்த வகையில் தற்போது ஐசிசி தரவரிசையிலும் விராட் கோலியின் சாதனையை உடைக்க வரும் சூரியகுமார் உண்மையாகவே அவரைப்போலவே டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார் என்றே கூறலாம்.

அவரை தவிர்த்து தற்சமயத்தில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. டாப் பந்து வீச்சாளர்கள் பட்டியலிலும் எந்த இந்திய பவுலரும் இல்லை. ஆல் ரவுண்டர்களுக்கான பிரிவில் மட்டும் ஹர்திக் பாண்டியா 3வது இடத்தில் உள்ளார். அத்துடன் ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரசையில் நியூசிலாந்து தொடரை வென்ற இந்தியா தொடர்ந்து 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கிறது. 2வது இடத்தில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்தும் 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement