194.59 ஸ்ட்ரைக் ரேட்.. ஆஸிக்கு எதிராக கிங் கோலியின் மாஸ் சாதனையை உடைத்த சூரியகுமார் – ஜஹீர், ரோஹித்தின் சாதனை சமன்

Suryakumar yadav and Virat kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நேற்று இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த வகையில் ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து இத்தொடரிலும் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி 2023 உலகக்கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் காட்டியுள்ளது. முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறி வந்த சூரியகுமார் யாதவ் ஒரு வழியாக இந்த தொடரில் முழுமையான ஃபார்முக்கு வந்துள்ளது இந்திய அணியை முழுமையாக பலப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சூர்யாகுமாரின் சாதனை:
அறிமுகமானது முதலே டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு விமர்சனத்திற்குள்ளானார். குறிப்பாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஹர்ட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்ற கிண்டல்களையும் சந்தித்தார்.

இருப்பினும் அணி நிர்வாகத்தின் ஆதரவால் இத்தொடரின் முதல் போட்டியில் 50 (49) ரன்கள் அடித்த அவர் 2வது போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான இந்தூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா பவுலர்களை புரட்டி எடுத்து தலா 6 பவுண்டரி சிக்ஸருடன் 72* (37) ரன்களை விளாசி இந்தியா 399/5 ரன்கள் குவிப்பதற்கு உதவினார். அதிலும் 194.59 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் 70க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 194.59, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*
2. ரிசப் பண்ட் : 192.50, இங்கிலாந்துக்கு எதிராக, 2021
3. விராட் கோலி : 192.30, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013

- Advertisement -

அத்துடன் கேமரூன் கிரீன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் 2000ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஜாகிர் கான், 2017இல் இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இப்டி இருந்தா நீங்க எப்போ ரோஹித், சேவாக் மாதிரி வருவீங்க.. அட்டகாசமாக விளையாடியும் – சுப்மன் கில் மீது சேவாக் அதிருப்தி பேட்டி

அதை விட வெறும் 24 பந்துகளில் 50 ரன்கள் கடந்த அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 27 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement