
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தை பயன்படுத்தி தென் ஆப்பிரிக்காவை 106/8 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அதை சேசிங் செய்வதற்கு ரொம்பவே தடுமாறியது. ஏனெனில் பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக விராட் கோலி 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அதனால் 17/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேஎல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற மோசமான உலக சாதனையுடன் 51* (56) ரன்கள் எடுத்தார். ஆனால் அவரை விட அற்புதமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல முதல் பந்திலிருந்தே அதிரடியை வெளிப்படுத்தி 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 50* (33) ரன்களை விளாசி பினிசிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.
எப்படி போட்டாலும்:
அதிலும் பேட்டிங்க்கு சவாலாக இருந்த மைதானத்தில் அத்தனை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும் திண்டாடிய போது தாம் மட்டும் ஃபிளாட்டான தார் ரோடு பிட்ச்சில் விளையாடுவது போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் கொஞ்சமும் தடுமாறாமல் மிகத் தெளிவாக விளையாடியது அவரது திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியது. 30 வயதில் தாமதமாக சர்வதேச அரங்கில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிக பட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று உலகின் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் இந்திய பேட்டிங் துறையில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார்.
இந்நிலையில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் தற்சமயத்தில் உலகின் தரமான டி20 பேட்ஸ்மேன் என்றும் எப்படி பந்து வீசினாலும் நாலாபுறமும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ளதாகவும் தென் ஆப்பிரிக்க வீரர் வேன் பர்ணல் பாராட்டியுள்ளார். இது பற்றி கவுகாத்தி போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில மாதங்களாகவே நான் பார்த்ததில் தற்சமயத்தில் சூர்யகுமார் யாதவ் உலகின் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உள்ளார் என்று நினைக்கிறேன்”
“அவர் 360 டிகிரியிலும் அடிப்பதால் அவருக்கு எதிராக கட்டுக் கோப்புடன் பந்து வீச பவுலர்களுக்கு கடினமாக உள்ளது. ஒவ்வொரு பந்தையும் தைரியமாக எதிராக எதிர்கொள்ளும் அவருடைய மனப்பான்மையே இதற்கு காரணமாகும். அனைத்து வகையான ஷாட்டுகளை அடிக்கும் அனுமதி பெற்றுள்ள அவர் முதல் போட்டியில் சில அழகான ஷாட்டுகளை அடித்தார். அதை பார்த்தது எங்களுக்கும் அதிர்ஷ்டமான நாளாகும். அந்த வகையில் அன்றிரவு எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல் அவரது பேட்டிங்கை பார்த்து நான் மிகவும் ரசித்தேன். கடந்த சில மாதங்களாகவே அவர் மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறார்” என்று கூறினார்.
மேலும் முதல் போட்டியில் பேட்டிங் துறையில் தங்களது திட்டங்கள் செயல்படவில்லை என்பதால் தோல்வி கிடைத்ததாக தெரிவிக்கும் வேன் பர்ணல் அதற்காக பதற்றமடையாமல் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முயற்சி உள்ளதாகவும் கூறினார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “முதல் டி20 எங்களுடைய திட்டத்திற்கு ஏற்ப செல்லவில்லை. மேலும் திடீரென்று ஒரு புதிய மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் உங்களுக்கு என்னவெல்லாம் தவறாக சென்றது என்பதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை”
“ஏனெனில் அடுத்த போட்டி மற்றொரு புதிய மைதானத்தில் நடைபெற உள்ளது. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதால் இந்த தோல்விக்காக நாங்கள் பதற்றமடையவில்லை” என்று கூறினார். தற்சமயத்தில் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்கா இத்தொடரின் கோப்பையை வெல்ல அக்டோபர் 2ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற நிலைமையில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.