
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. அந்தத் தொடரில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் ருதுராஜ்க்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் நியூஸிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்தாலும் ரோஹித் சர்மா இப்போதும் சிறந்த கேப்டன் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக அசத்தி வரும் சிறந்த வீரர்”
“அதே சமயம் அவருக்கு முன்பாகவே நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். எனவே அணி நிர்வாகம் சுழற்சி முறையிலான செயல்முறைகளை பின்பற்றுவது முக்கியம். ருதுராஜ் தொடர்ச்சியாக அசத்தி வருவதால் அவருக்கான நேரமும் விரைவில் வரும் என்று நம்புகிறேன். விளையாட்டில் வெற்றி தோல்விகள் நடந்து கொண்டிருக்கும் அனைவரும் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார்கள்”
“சில நேரங்களில் அது வேலை செய்யும் சில நேரங்களில் செய்யாது. ஆனால் அதையும் தாண்டி வாழ்வில் சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதை நான் ரோகித் சர்மாவிடம் இருந்து மட்டுமே கற்றுள்ளேன். நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாத அவரைப் போன்றவரை நான் வாழ்வில் பார்த்ததில்லை. நான் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவரைப் பார்த்து வளர்ந்தேன்”
“ஒரு கேப்டன் தன்னுடைய அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார். கேப்டன் எப்போதும் வெற்றி பெற விரும்புவார். ஆனால் லீடர் தன்னுடைய அணியின் விளையாடும் ஸ்டைலை தீர்மானிப்பார். அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். அவருடன் நான் ஐபிஎல் தொடரில் நிறைய விளையாடியுள்ளேன். அங்கே அவர் எப்படி அழுத்தத்தை கையாள்கிறார், உடல் மொழி, பவுலர்களை எப்படி வழி நடத்துகிறார் என்பது போன்றவற்றை நான் கவனித்துள்ளேன்”
இதையும் படிங்க: பும்ராவை முடிக்க அட்டவணையில் ஆஸி திட்டம் போட்ருக்காங்க.. இந்தியா என்ன செய்யப்போகுதே.. சைமன் டௌல்
“நானும் அதையே செய்ய விரும்புகிறேன். களத்தில் இல்லாத போது நான் வீரர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுடன் பயணித்து சாப்பிடுவது போன்ற செயல்களை செய்து வருகிறேன். இது போன்ற சிறிய விஷயங்கள் கூட களத்தில் எதிரொலிக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் எட்டாம் தேதி டர்பன் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.