
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த வெற்றியால் சூரியகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு பலதரப்பு தொடரின் கோப்பையை வென்று அசத்தினார். மும்பையை சேர்ந்த அவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி 2021ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானார்.
அந்த வாய்ப்பில் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பைப் பெற்ற அவர் அந்த 2 ஃபார்மட்டில் அசத்தவில்லை. இருப்பினும் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அசத்திய அவர் இன்று இந்தியாவின் கேப்டனாக முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் தம்முடைய கேரியரில் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பைப் பெறாதது ஏமாற்றமளிப்பதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடைய தலைமையில் விளையாடி கற்றுக்கொண்டது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் தோனி இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட போது அவருடைய தலைமையில் விளையாட நான் விரும்பினேன்”
“ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக விளையாடும் போது கீப்பராக அவரை நான் பார்த்துள்ளேன். மிகவும் பொறுமையாக அமைதியாக இருக்கக்கூடிய அவரிடம் அனைத்து அழுத்தமான சூழ்நிலைகளிலும் எப்படி ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். எப்போதும் போட்டியைச் சுற்றி இருக்கக்கூடிய தோனி நடக்கும் விஷயங்களைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் முடிவுகளை எடுப்பார்”
“விராட் பாய் தலைமையில் நான் அறிமுகமானேன் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் கடினமாக வேலை வாங்கக்கூடியவர். அவர் உங்களுடைய வரைமுறைகளைத் தொட்டுச் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவதை விரும்புவார். அனைத்து கேப்டன்களுமே அதை செய்ய விரும்பினாலும் விராட் கோலி களத்திலும் களத்திற்கு வெளியேயும் முழுமையான எனர்ஜியைக் கொண்டிருப்பார். அவர் கொஞ்சம் வித்தியாசமானவர்”
இதையும் படிங்க: விராட், ரோஹித் 2027 உ.கோ சான்ஸ் கேரண்டி கிடையாது.. ஆனா அவருக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.. ஏபிடி பேட்டி
“பின்னர் ரோஹித் பாய் தலைமையில் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக நான் நிறைய விளையாடினேன். தன்னைச் சுற்றி அனைவரையும் கச்சிதமாக வைத்துக் கொள்ளக்கூடிய அவர் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பவராக இருப்பார். அவருடைய அறைக்கதவுகள் அனைத்து நேரமும் திறந்திருக்கும். அவரிடம் அந்த வித்தியாசமான தரத்தை நான் கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.