வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளின் கில்லியாக செயல்படும் சூரியகுமார் – விராட் கோலி, பாபர் அசாம் உலக சாதனை சமன்

Suryakumar Yadav Record
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. இதே வெஸ்ட் இண்டீஸில் அடுத்த வருடம் நடைபெறப் போகும் 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்துடன் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்து போராடியது.

ஆனாலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு தொடரில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்பது போல் இத்தொடரில் திலக் வர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 2 இளம் வீரர்கள் இந்தியாவுக்கு கிடைத்தது ஆறுதலான அம்சமாக அமைந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

கில்லியாக சூர்யாகுமார்:
முன்னதாக இத்தொடரில் பேட்டிங் துறையில் தனி ஒருவனாக போராடிய திலக் வர்மாவுக்கு கை கொடுக்கும் வகையில் 3வது போட்டியில் சரவெடியாக விளையாடி 84 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ் தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து இந்தியாவில் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அதே போல 4வது போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் வாழ்வா – சாவா என்ற வகையில் நடைபெற்ற 5வது போட்டியில் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (45) ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தார்.

பொதுவாகவே இருதரப்பு தொடர்களாக இருந்தாலும் 1 – 1 அல்லது 2 – 2 என்ற கணக்கில் தொடஎ சமனில் இருக்கும் போது வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி கிட்டத்தட்ட ஐசிசி நாக் அவுட் போட்டிக்கு நிகரான அழுத்தத்தை கொண்டிருக்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் இந்த 61 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருதரப்பு தொடர்களின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது சாதனைகளை சூரியகுமார் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த மூவருமே வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளில் அதிகபட்சமாக தலா 3 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர். அதில் குறிப்பாக சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 69 (2022 அக்டோபர்), இலங்கைக்கு எதிராக 112* (2023 ஜனவரி) வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 61 என 3 வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார்.

அதை விட டி20 கிரிக்கெட்டில் இதுவரை 50 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 18 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் 50 இன்னிங்ஸில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் என்ற இந்தியாவின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரின் உலக சாதனையையும் சூரியகுமார் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி/சூரியகுமார் யாதவ்/பாபர் அசாம் : தலா 18*
2. கேஎல் ராகுல் : 17
3. முகமது ரிஸ்வான் : 16
4. கிறிஸ் கெயில்/டேவிட் மாலன் : தலா 15

இதையும் படிங்க:IND vs WI : எனக்கு இப்படி காயம் ஆனதுக்கு அவங்க 2 பேர் தான் காரணம் – நிக்கோலஸ் பூரான் வெளியிட்ட தகவல்

அத்துடன் ஐபிஎல் மற்றும் சர்வதேச என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து கடந்த வருடம் 1000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த அவர் இந்த வருடமும் 1000 ரன்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக அடுத்தடுத்த காலண்டர் வருடங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட டி20 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019, 2020 ஆகிய அடுத்தடுத்த சீசன்களில் ராகுல் தலா 1000 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement