ரோஹித் 16, மேக்ஸ்வெல் 11 வருடத்தில் செய்த சாதனையை 3 வருடத்தில்.. சமன் செய்த சூரியகுமார் புதிய உலக சாதனை

Suryakumar Record
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு 3வது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

டிசம்பர் 14ஆம் தேதி ஜொஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவ் 100 (56), ஜெய்ஸ்வால் 60 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சூர்யகுமாரின் உலக சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்த வெற்றிக்கு 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 100 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டி சென்றார்.

2023 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று அனைவரும் பேசும் அளவுக்கு திண்டாடி வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக எதிரணிகள் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றிகள் பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த போட்டியிலும் அட்டகாசம் செய்த அவர் தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து கேப்டனாக இந்தியாவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

அதை விட இதையும் சேர்த்து தம்முடைய கேரியரில் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ள சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ரோஹித் சர்மா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (தலா 4) ஆகியோரின் வாழ்நாள் உலக சாதனையை சமன் செய்தார். குறிப்பாக 2007இல் அறிமுகமான ரோகித் சர்மா 16 வருடங்களில் 140 இன்னிங்ஸில் 2012இல் அறிமுகமான மேக்ஸ்வெல் 11 வருடங்களில் 92 இன்னிங்ஸில் அடித்த 4 சதங்களை 2021இல் அறிமுகமான சூரியகுமார் வெறும் 3 வருடங்களுக்குள் 57 இன்னிங்ஸிலேயே சமன் செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நானே பாத்தேன்.. இந்தியாவுக்கு சாதகமா இருந்து.. எங்கள ஏமாத்திடுச்சு.. தோல்விக்கு பின் தெ.ஆ கேப்டன் ஏமாற்ற பேட்டி

இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 15* (39 இன்னிங்ஸ்)
2. இயன் மோர்கன் : 14 (105 இன்னிங்ஸ்)
3. கிளன் மேக்ஸ்வெல் : 11 (74 இன்னிங்ஸ்)

Advertisement