ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்து வருகிறது. அதை விட ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே ஒற்றுமையாக இல்லை என்றும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. அதை ரோகித் சர்மாவை பவுண்டரிக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தியதும், மலிங்காவுக்கு மரியாதை கொடுக்காமல் பாண்டியா நடந்து கொண்டதும், பாண்டியாவிடம் பேசாமல் பும்ரா சென்ற வீடியோக்கள் உறுதி செய்யும் வகையில் அமைந்தன.
மீண்டும் வரும் சூரியகுமார்:
இதற்கிடையே பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் சூரியகுமார் யாதவ் காயத்தால் விளையாடாதது மும்பையின் அடுத்தடுத்து தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் கணுக்காலில் காயத்தை சந்தித்த சூரியகுமார் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் முழுமையாக குணமடையாத அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடாதது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் 360 டிகிரியில் அடிக்கக்கூடிய அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் முழுமையாக ஃபிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தற்போது ஃபிட்டாகியுள்ள அவரை என்சிஏ சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட வைத்து பார்த்தது. அதில் அவர் நன்றாக தெரிந்தார். எனவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய முடியும். நாங்கள் சூர்யா 100% ஃபிட்டாகி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதை விரும்பினோம்”
இதையும் படிங்க: இப்பொல்லாம் அது தான் அதிகமா பிடிக்குது.. டெல்லியை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற நரேன் பேட்டி
“ஐபிஎல் தொடருக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட ஃபிட்னஸ் சோதனையில் அவர் 100% தயாராக இல்லை. எனவே பேட்டிங் செய்யும் போது ஏதேனும் வலி ஏற்படுகிறதா என்பதை நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார். இதனால் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒருவேளை அதில் விளையாடாவிட்டாலும் ஏப்ரல் 11ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மும்பைக்காக சூரியகுமார் யாதவ் விளையாடுவார் என்று 100% உறுதியாக நம்பலாம்.