IPL 2023 : பவர்பிளே முடிந்தும் பவராக அடித்த சூரியகுமார் – சதமடிப்பதில் வேறு எந்த இந்திய வீரரும் படைக்காத தனித்துவ சாதனை

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 7வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 80% உறுதி செய்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 218/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தனது ஸ்டைலில் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்தியாசமான ஷாட்டுகளால் அடித்து நொறுக்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 103* (49) ரன்கள் குவித்தார்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 219 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஹா 2, சுப்மன் கில் 6, ஹர்திக் பாண்டியா 4 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

யாராலும் முடியாது:
அதனால் கடைசியில் டேவிட் மில்லர் 41 (26) ரன்களும் ரசித் கான் தனி ஒருவனாக 3 பவுண்டரி 10 சிக்சரை பறக்க விட்டு 79* (32) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவர்களில் குஜராத்தை 191/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 103* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இதே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தாமதமாக சர்வதேச கிரிக்கெட்டில் 30 வயதில் அறிமுகமானாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் சூரியகுமார் யாதவ் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். குறிப்பாக இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடும் அளவுக்கு கற்பனை செய்ய முடியாத ஷாட்களை பறக்க விடும் அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி சுமாரான சாதனை படைத்தார்.

- Advertisement -

அதன் தாக்கம் இத்தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் எதிரொலித்ததால் மும்பையும் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறியது. ஆனால் முதல் 5 போட்டிகளில் 66 (47) ரன்களை மட்டும் எடுத்த அவர் அடுத்த 7 போட்டிகளில் 413 (204) ரன்களை விளாசி பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் 83 ரன்களை தெறிக்க விட்டு மும்பையை நேராக புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேற உதவினார். அதே வேகத்தில் இந்த போட்டியிலும் அட்டகாசமாக செயல்பட்டு மும்பைக்கு அறிமுகமான 8 வருடங்கள் கழித்து தன்னுடைய. முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அதை விட பவர் பிளே முடிந்த 6.2வது பந்தில் களமிறங்கிய சூரியகுமார் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 17வது ஓவரின் முடிவில் 53* ரன்களை எட்டினார். ஆனால் அதன் பின் இரு மடங்கு வேகத்தில் குஜராத் பவுலர்களை புரட்டி எடுத்த அவர் 20வது ஓவரின் கடைசி பந்தில் 97 ரன்களில் இருந்த போது தனது ஸ்டைலில் சிக்ஸரை பறக்க விட்டு சதத்தை தொட்டார்.

1. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே முடிந்த பின் களமிறங்கி சதமடித்த 3வது வீரர் மற்றும் முதல் மும்பை வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யூசுப் பதான் : 6.4 ஓவர்களுக்குப்பின் – மும்பைக்கு எதிராக, 2010
2. டேவிட் மில்லர் : 7.5 ஓவர்களுக்குப்பின் பெங்களூருக்கு எதிராக, 2013
3. சூரியகுமார் யாதவ் : 6.2 ஓவர்களுக்குப்பின், குஜராத்துக்கு எதிராக, 2023*

2. மேலும் கடந்த வருடம் இந்தியாவுக்காக நாட்டிங்கம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக 117 (55) ரன்களும் மௌன்ட் மவுன்கனி நகரில் நியூசிலாந்துக்கு எதிராக 111* (55) ரன்களை விளாசிய அவர் இந்த வருடம் ஜனவரியில் இலங்கைக்கு எதிராக கௌகாத்தியில் 112* (51) ரன்களை விளாசி தற்போது மும்பைக்காக 103* (49) ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு காலண்டர் (2022, 2023) வருடத்தில் 2 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் படைக்காத தனித்துவமான சாதனையையும் சூரியகுமார் படைத்துள்ளார்.

Advertisement