ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறி விட்டது. அந்த சூழ்நிலையில் மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற 60வது லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது. அப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 42, நிதிஷ் ராணா 33 ரன்கள் எடுத்த உதவியுடன் கொல்கத்தா 158 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
ஆனால் அதைத் துரத்திய மும்பை சுமாராக விளையாடி 139/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ரோஹித் சர்மா 19 (24), சூரியகுமார் யாதவ் 11 (14), கேப்டன் பாண்டியா 2 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் திலக் வர்மா 32, இஷான் கிசான் 40 ரன்கள் எடுத்தும் மும்பை தோல்வியை சந்தித்தது.
சூர்யாகுமாரின் வீக்னெஸ்:
அதனால் ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்து கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. முன்னதாக இந்த போட்டியில் உலகில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக தடுமாறினார். பொதுவாகவே எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கக்கூடிய அவர் இப்போட்டியில் 14 பந்துகளில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 11 ரன்னில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமானது.
இந்நிலையில் கொஞ்சம் மெதுவாக ஒய்ட் போன்ற அகலமான பந்தை வீசினால் சூரியகுமாரை எளிதாக அவுட்டாக்கலாம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இந்த யுக்தியை கடந்த 2023 உலகக் கோப்பையில் அவருக்கு எதிராக ஆஸ்திரேலியா கச்சிதமாக பயன்படுத்தியதாகவும் ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“பந்து வீச்சை பொறுத்த வரை சூரியகுமார் யாதவுக்கு எதிராக ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் ஸ்லோவாக ஒய்டாக வீச வேண்டும். அதை நாம் கடந்த உலகக் கோப்பையிலும் பார்த்தோம். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாகவும் மைதானத்தின் பவுண்டரி அளவு சற்று பெரியதாகவும் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக இந்த திட்டத்தை எதிரணிகள் பயன்படுத்தலாம். சூரியகுமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் உழைக்க வேண்டும்”
இதையும் படிங்க: நீங்க எவ்ளோ பெரிய பேட்ஸ்மேனா இருந்தாலும் அதுக்கு மரியாதை கொடுங்க.. ரோஹித், சூரியகுமாரை விமர்சித்த சேவாக்
“ஸ்பின்னர்களுக்கு எதிராக மும்பை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ரோஹித் சர்மா பெரிய சிக்சர்கள் அடிப்பதற்கு பெயர் போனவர். ஆனால் இன்று அவர் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்தார். அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது மும்பை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது” என்று கூறினார்.