கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் – விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றமான தோல்வியை சந்தித்த பின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமாரின் அதிரடியாக சதமடித்ததால் 65 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றியே இறுதியில் இந்தியாவுக்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ளது.

ஏனெனில் நேப்பியரில் நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவோன் கான்வே 59, கிளன் பிலிப்ஸ் 54 என முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்ததால் ஒரு கட்டத்தில் 130/2 என்ற நல்ல நிலைமையில் இருந்த நியூசிலாந்தை கடைசி நேரத்தில் அதிரடியாக பந்து வீசி மடக்கி பிடித்த இந்தியா 200 ரன்களை தொடவிடாமல் சுருட்டியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 10, ரிஷப் பண்ட் 11, ஷ்ரேயஸ் ஐயர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடியை துவங்கினாலும் 13 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் முக்கிய நேரத்தில் கேப்டன் பாண்டியா அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்ததால் 9 ஓவரில் இந்தியா 75/4 ரன்களுடன் விளையாடிய போது மழை வந்தது. அப்போது அதிர்ஷ்டம் ஆச்சரியமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி தேவையான ரன்களை சரியாக இந்தியா எடுத்திருந்ததால் போட்டி சமனில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதனால் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து கோப்பையை வென்றுள்ள இந்தியா 2024 டி20 உலக கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை முகமது சிராஜ் வென்றாலும் இந்த கோப்பையை வெல்ல 2வது போட்டியில் சதமடித்து மொத்தமாக 124 ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக திகழ்ந்த சூரியகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

கடந்த வருடம் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக செயல்பட்டு வரும் அவர் இதர இந்திய வீரர்களை காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே தர வரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த 2022ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேனாக நிறைய சாதனைகளை படைத்து வரும் அவர் உலகிலேயே அதிகபட்சமாக 7 ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.

1. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (6 விருதுகள்) சாதனையை கடந்த போட்டியிலேயே சூரியகுமார் தகர்த்திருந்தார்.

2. அந்த நிலைமையில் தற்போது தொடர் நாயகன் விருதை வென்றுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அதிகபட்சமாக 2 தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தார்கள். ஆனால் 2022இல் சக்கை போடு போட்டு வரும் சூரியகுமார் இந்த விருதையும் சேர்த்து 3 தொடர் நாயகன் விருதுகளை வென்று அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

Advertisement