
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. அத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களது சொந்த மண்ணில் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்க உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் தலைமையில் இந்திய அணி வெல்வதற்கு ஃபைனலில் முக்கியமான கேட்ச் பிடித்த சூரியகுமார் கருப்பு குதிரையாக திகழ்ந்தார்.
இந்நிலையில் வரலாற்றில் எந்த அணியும் டி20 உலகக் கோப்பையை மீண்டும் என்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்ததில்லை. இருப்பினும் இம்முறை தம்முடைய தலைமையில் இந்தியா தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்று டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணியாக உலக சாதனை படைக்கும் என்று சூரியகுமார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற உதவுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக களத்திலும் களத்திற்கு வெளியேயும் நான் அக்கறை காட்ட வேண்டிய நிறைய வீரர்கள் உள்ளனர். எங்களுடைய அணியின் சூழ்நிலை முழுவதும் ரிலாக்ஸாக இருக்கிறது. அனைத்தும் நன்றாகச் செல்கிறது. நிறைய வீரர்கள் நன்றாக விளையாடி கேப்டனாக என்னுடைய வேலையை எளிதாக்குகிறார்கள். கிரிக்கெட்டை பயமின்றி விளையாடும் பிராண்டை பின்பற்ற விரும்பும் எங்களுக்கு எங்கள் வீரர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்”
“எனவே அது எனது வேலையை எளிதாக்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நாங்கள் இந்தியாவுக்கு திரும்பிய போது கேப்டனாக எனது புதிய பயணம் துவங்கியது. அப்போது அடுத்த உலகக் கோப்பையை வெல்லும் கேப்டனாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று என்னுடைய மனைவி சொன்னார்”
“அதற்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நான் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னிலையில் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது நல்லது. டி20 உலகக் கோப்பையை எந்த அணியும் தக்க வைத்ததில்லை என்று சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். எனவே இம்முறை அதை சாதிப்பது நல்ல சவாலாகவும் பொறுப்பாகவும் இருக்கும். இந்தியாவில் அதை செய்ய முயற்சிப்பது வேடிக்கையாகவும் இருக்கும்”
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் ஜிதேஷ் கழற்றி விடப்பட்டு ரிங்கு சிங் செலக்டாக இதான் காரணம்.. அஸ்வின் பேட்டி
“2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை மில்லியன் கணக்கில் நான் பார்த்துள்ளேன். இன்றும் யாரையாவது பார்க்கும் போது அவர்கள் என்னிடம் ஃபைனலில் நான் பிடித்த கேட்ச்சை நினைவூட்டுகிறார்கள். அந்த புகைப்படத்தை இன்னும் என்னுடைய அலைபேசியில் சேமித்து வைத்துள்ளேன். அதைத் தொடர்ந்து பார்க்கிறேன். ஏனெனில் அது மிகவும் ஸ்பெஷலான தருணம். அந்த உண்மையை சொல்வதிலிருந்து ஓட விரும்பவில்லை” என்று கூறினார்.