விராட் கோலி போன்ற யாரும் தொடாத உச்சம் – டி20 கிரிக்கெட்டில் முதல் ஐசிசி இந்தியராக புதிய வரலாறு படைத்த சூரியகுமார் யாதவ்

Suryakumar-Yadav
- Advertisement -

2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி ஐசிசி கௌரவித்து வருகிறது. அதில் முதலாவதாக 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணிகளை ஐசிசி வெளியிட்டு கௌரவித்தது. அதில் சிறந்த கனவு டி20 அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோரும் ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோரும் டெஸ்ட் அணியில் ரிசப் பண்ட் மட்டும் தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தனிநபர் விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதில் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவை சேர்ந்த சூரியகுமார் யாதவும் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்று இந்தியாவிற்கு மற்றுமொரு பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்த அவர் கடுமையான போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமானார்.

- Advertisement -

வரலாறு படைத்த சூர்யா:
பொதுவாக 20 வயதில் அறிமுகமாக வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானதாலோ என்னவோ தெரியவில்லை தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியான பேட்டிங்கை துவங்கி எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை விளாசிய அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக கடந்த 2 வருடங்களில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களையும் மிஞ்சி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்த அவர் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோரை மிஞ்சி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார். அதை விட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விடும் அவர் யாருமே எதிர்பாராத புதுப்புது ஷாட்களை அடித்து டி20 பேட்டிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதைப் பார்த்து வியந்த அத்தனை ரசிகர்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என பாராட்டிய அவரை கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை மிஞ்சிய உலகின் புதிய யுனிவர்சல் பாஸ் என்றும் ரிச்சர்ட்ஸ், சச்சின் வரிசையில் நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் மகத்தான வீரர் என்றும் கபில் தேவ் போன்ற நிறைய முன்னாள் வீரர்களும் பாராட்டினர். அந்த வேகத்தில் 31 போட்டிகளில் 1164 ரன்களை 46.56 என்ற அபாரமான சராசரியில் 187.43 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 2022ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்தார்.

மேலும் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் (68) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து வரலாற்றின் சிறந்த இந்திய மற்றும் ஆசிய டி20 வீரராகவும் சாதனை படைத்தார். அப்படி ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த அவரை 2022ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஐசிசி பாராட்டியுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி போன்ற யாரும் தொடாத உச்சம் – டி20 கிரிக்கெட்டில் முதல் ஐசிசி இந்தியராக புதிய வரலாறு படைத்த சூரியகுமார் யாதவ்

சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் இந்த விருதை வெல்லும் முதல் இந்திய வீரராக சூரியகுமார் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் கூட இதை வென்றதில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட், சேவாக், கம்பீர், அஸ்வின், விராட் கோலி ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வென்றுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சூரியகுமார் தான் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Advertisement