நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வென்ற ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 385/9 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 101 (85) ரன்களும் சுப்மன் கில் சதமடித்து 112 (78) ரன்களும் எடுக்க கடைசியில் ஹர்திக் பாண்டியா 54 (38) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார். அதை தொடர்ந்து 386 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் டேவோன் கான்வே நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு சதமடித்து 12 பவுண்டரி 3 சிக்சருடன் 138 (100) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் ஹென்றி நிக்கோலஸ் 42 (40) ரன்கள் எடுத்தது தவிர ஃபின் ஆலன் 0, கேப்டன் டாம் லாதம் 0, கிளன் பிலிப்ஸ் 5 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 295 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து பரிதாபமாக தோற்றது.
மஞ்ரேக்கர் ஆதங்கம்:
அதனால் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் முக்கிய நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த சர்தூள் தாகூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். மொத்தமாக 360 ரன்கள் விளாசிய சுப்மன் கில் தொடர் நாயகன் விருது வென்றார். இறுதியில் இத்தொடரின் கோப்பையை வாங்குவதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், தாகூர் போன்றவர்களை பாராட்டிய கேப்டன் ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்ற முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் இப்போட்டியில் விளையாடாத காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை.

இருப்பினும் காயமடைந்த பும்ரா இல்லாத குறை கொஞ்சமும் தெரியாத அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வரும் அவர் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரிலும் 9 விக்கெட்டுகளை சாய்த்து அற்புதமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்த அவருக்கு இதுவரை ஆட்டநாயகன் தொடர் நாயகன் போன்ற எந்த விருதுமே கிடைக்கவில்லை. மாறாக விராட் கோலி, சுப்மன் கில், தாகூர், ஷமி ஆகியோருக்கு தான் அந்த விருதுகள் வென்றனர்.
இந்நிலையில் அது போல் விருதுகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சிராஜை குறைந்தபட்சம் வாய் வார்த்தைகளிலாவது பாராட்டுங்கள் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி முடிந்த பின் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவரது பெயர் அதிகம் உச்சரிக்கப்படவில்லை. அவரைப் பற்றி யாரும் பெரும்பாலும் பேசவில்லை. ஆனால் நமது அணியில் ஒரு வீரர் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மற்றொரு வீரர் அபாரமானவராக வளர்பவராகவும் இருப்பதை நான் பார்க்கிறேன்”

“இதை நான் பலமுறை பார்த்து வருகிறேன். ஆனால் தற்சமயத்தில் சிராஜ் முழுமையான சீம் பவுலராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் அசத்துகிறார் என்பதை காட்டவில்லை. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்துவதை காட்டுகிறது. சுப்மன் கில் இரட்டை சதமும் சதமும் அடித்தார். ஆனால் உலகின் கடினமான எதிரணிக்கு எதிராக மிகப்பெரிய போட்டிகளில் முகமது சிராஜ் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்பட்ட போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நான் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன், விராட் கோலி எனக்கு அப்றம் தான் – யாரென தெரியாத பாக் வீரர் பகிரங்க பேட்டி
முன்னதாக இலங்கைத் தொடரின் தொடர் நாயகன் விருதை விராட் கோலிக்கு பதில் முகமது சிராஜ்க்கு கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணியில் பவுலர்கள் மதிக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



