
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர்கள் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை வரை விளையாடி விட்டு அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வயது மூப்பு காரணமாகவும், ஒரே பார்மெட் வீரர்கள் என்பதனாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவர்கள் இருவரையும் கழட்டிவிட இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் அனுபவ வீரர்களான அவர்களுக்கு சரியான வழி அனுப்புதல் வேண்டும் என்பதனால் 2027 ஒருநாள் உலக கோப்பை வரை அவர்களை விளையாட வைக்க வேண்டும் என ஒருபுறம் ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அவர்கள் இருவரது எதிர்காலம் குறித்து பேசுகையில் கூறியதாவது :
ரோகித் சர்மா மற்றும் ஒரு விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகின்றனர். இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் 2027 உலக கோப்பை வரை விளையாடுவது ஒரு கடினமான காலகட்டம் தான். ஆனால் என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அவர்கள் இருவரையுமே 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும்.
ஏனெனில் ஏற்கனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை வென்றுள்ளனர். எனவே இந்த ஒருநாள் உலக கோப்பையும் அவர்கள் ஒன்றாக இணைந்து வெற்றி பெற்று கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதே சரியாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதோட முடிஞ்சிடாது.. கே.எல் ராகுல் நிச்சயமா கம்பேக் கொடுப்பாரு – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.