
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை ராஜஸ்தானிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கொடுக்குமாறு சென்னை அணிக்கு ராஜஸ்தான் நிர்பந்தம் விதித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த செய்தி பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்களை கடுப்பேற்றும் வகையில் அமைகிறது. ஏனெனில் 2012 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா 2018, 2021, 2023 கோப்பைகளை தோனி தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினர். குறிப்பாக 2023 இறுதிப் போட்டியில் கைமீறிய வெற்றியை அவர் கடைசி பந்தில் சிஎஸ்கே அணிக்கு பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது.
அத்துடன் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரராகவும் ஜடேஜா சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை கழற்றி விட்டு சஞ்சு சாம்சனை வாங்கலாம் என்பது பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிடிக்காத முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு துப்பாக்கியைப் போல் செயல்படக்கூடிய ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர் தேவை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
மேலும் 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா எம்எஸ் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வேண்டுமென்றும் ரெய்னா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி கண்டிப்பாக தக்க வைக்கப்பட வேண்டும். அவர் இந்த வருடம் விளையாடுவார். எனவே அவர் அணியுடன் இருக்க வேண்டும்”
“ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர வேண்டும். ரவீந்திர ஜடேஜா மீண்டும் தக்க வைக்கப்பட வேண்டும். அவர் சிஎஸ்கே அணிக்காக துப்பாக்கியை போல் செயல்படக்கூடிய வீரர். அவர் இந்த அணிக்காக நீண்ட வருடங்களாக மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே சர் ரவீந்திர ஜடேஜா அணியில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: காப்பியடித்து விட்டு இந்தியா, பாண்டியா, டிகேவை கலாய்த்த பாகிஸ்தான் கேப்டன்.. ரசிகர்கள் பதிலடி
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சஞ்சு சாம்சனை வாங்குகிறோமா இல்லையா என்பது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் கலக்கத்துடனேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.