IPL 2023 : இந்த ஐபிஎல் முடிஞ்சதும் அவருக்கு நேரடியா 11 பேர் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்கும் – இளம் வீரரை பாராட்டிய ரெய்னா

Raina-2
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களது அணிகளை வெற்றி பெற வைப்பதுடன் இந்தியாவுக்காக விளையாடும் கனவுடன் போராடி வரும் நிறைய இளம் வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா அசத்தி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர் 10 இன்னிங்ஸில் லோயர் ஆர்டரில் களமிறங்கி 234 ரன்களை 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அதிரடியாக செயல்பட்டார்.

அதனால் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி 260 ரன்களை 160.49 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி பஞ்சாப் அணியின் வெற்றிகளில் முடிந்தளவுக்கு பங்காற்றி வருகிறார். அதிலும் குறிப்பாக மெதுவாக துவங்கி சிங்கிள்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லாமல் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற முயற்சியுடன் விளையாடும் அவர் 41 (27), 25 (7), 24 (10), 21 (10), 49 (27), 21 (18) என கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ரன்களை பயமின்றி எடுக்கும் ஸ்டைலை கடைபிடித்து வருகிறார்.

- Advertisement -

11 பேர் அணியில்:
அப்படி அதிரடியாக செயல்படுவதால் ஏற்கனவே காயமடைந்துள்ள ரிசப் பண்ட்க்கு பதிலாக இந்திய அணியில் மாற்று வீரராக செயல்படும் அளவுக்கு ஜிதேஷ் சர்மா திறமை கொண்டுள்ளதாக சமீபத்தில் பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் போலவே எந்த நேரத்திலும் இந்தியாவுக்காக அவர் அறிமுகமாவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார். அதே போல் பயமின்றி பேட்டிங் செய்யும் அவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்ப்போம் என்று மற்றொரு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சமீபத்தில் பாராட்டினார்.

அப்படி முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் ஜிதேஷ் சர்மா இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறுவார் என்று சுரேஷ் ரெய்னாவின் பாராட்டையும் பெற்றுள்ளார். அதாவது 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக காயமடைந்த சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தேர்வான ஜிதேஷ் சர்மா விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு வரவில்லை.

- Advertisement -

அதே போல் அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் இந்த ஐபிஎல் தொடரில் அசத்துவதால் விரைவில் இந்தியாவுக்காக களமிறங்கும் வாய்ப்பை பெறுவார் என்று நம்புவதாக ரெய்னா பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் மிடில் ஆர்டரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதிலும் கடைசி நேரத்தில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் அதிரடி வீரரான அவர் ஏற்கனவே இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இருப்பினும் வாய்ப்பு பெறாத அவர் தற்போது சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் நல்ல விக்கெட் கீப்பிங் நுணுக்கங்கள் தெரிந்தவராகவும் முன்னேறியுள்ளார். குறிப்பாக தற்போது பேட்டிங் செய்யும் விதத்தால் அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்”

இதையும் படிங்க:வீடியோ : ட்ரேட் மார்க் ஃபுல் ஷாட் சிக்ஸர்களை விளாசிய ஹிட்மேன் – ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்து புதிய சாதனை

“எனவே தேர்வு குழுவினர் மீண்டும் அவரை தேர்வு செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதிரடியாக அடிக்கும் அவருடைய திறமை சிறப்பாக உள்ளது. அதை வருங்காலங்களில் இன்னும் நாம் நிறைய பார்ப்போம்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2024 டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கி வரும் தேர்வுக்குழு இந்த ஐபிஎல் தொடருக்கு பின் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளது. அதில் ரெய்னா கூறுவது போல ஜிதேஷ் சர்மாவும் வாய்ப்பு பெறுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement