
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே போல அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த வரிசையில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அந்தத் தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இதுவரை அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இந்தியாவுக்காக விளையாடியதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அபாரமாக விளையாடி கடந்த வருடம் மட்டும் 1500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார்.
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய அவர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடந்த தொடரில் சதத்தை அடித்து அற்புதமாக விளையாடினார். இது போக டி20 கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகி விளையாடாத போதிலும் ஜெய்ஸ்வாலை நம்பி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுத்த ரோஹித் சர்மாவுக்கு தலை வணங்குவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் பையன் ரன்களுக்காக பசியுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கதையை பார்க்கும் போதெல்லாம் அவர் இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது”
“அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத அந்த பையனை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள். அவர் நிறைய கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய கண்களில் வித்தியாசமான அணுகுமுறை தெரிகிறது”
இதையும் படிங்க: பும்ரா மற்றும் ஷமி ஆடமாட்டாங்க.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவர்தான் ஆடுவாரு – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
“அதே சமயம் வித்தியாசமான அமைதியையும் கொண்டுள்ள அவர் தயாராக இருப்பது போல் தெரிகிறது. இது தான் இந்திய கிரிக்கெட்டின் அழகாகும். நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஏதேனும் ஒரு பவர் உங்களை நாட்டுக்காக விளையாடச் சொல்லும். அதைத் தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோஹித் செய்துள்ளார்” என்று கூறினார்.