தோனி, சச்சின்க்கு இணையாக ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா பெறவுள்ள கவுரவம் – என்ன தெரியுமா ?

Raina-5
- Advertisement -

34 வயதான சுரேஷ் ரெய்னா 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் இணைந்து சர்வதேச விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அவ்வப்போது ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளராகவும் செயல்படுபவர். அவர் உலகளவில் கிரிக்கெட்டில் சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். அதுமட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்காக பல போட்டிகளில் முழு ஈடுபாட்டுடன் விளையாடிய இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.

Raina

- Advertisement -

இவர் 2005-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் அறிமுகமானவர். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் 36 அரை சதங்களும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 18 டெஸ்ட் போட்டிகளிலும் 78 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார்.

அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா 2008 – 2015, 2018ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2015-2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சுரேஷ் ரெய்னாவிற்கு ஐபிஎல் தொடருக்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா 13வது ஐபிஎல் சீசனில் விளையாடுவதை பார்ப்பதற்காக அனைவரும் காத்திருந்தபோது சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.

Raina-1

இது ரசிகர்களிடம் மாபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது மீண்டும் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு டி20 சையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தரபிரதேச அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையை கௌரவப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தின் பெவிலியனுக்கு சுரேஷ் ரெய்னாவின் பெயரை வைப்பதாக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Raina

இதுதொடர்பாக உத்திரப்பிரதேச அரசிடம் ஒப்புதல் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கான பி.சி.சி.ஐ ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மும்பை மைதானத்தில் சச்சினுக்கும், ராஞ்சி மைதானத்தில் தோனிக்கும், டெல்லி மைதானத்தில் கோலிக்கும் தனியாக பெயர் வைத்து அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் பெவிலியன் உள்ளது. அந்த வகையில் தற்போது சுரேஷ் ரெய்னாவுக்கும் அந்த கவுரவம் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement