500 போட்டிகளில் முதல் முறை.. ராஜஸ்தானை விளாசிய சுனில் நரேன்.. கொல்கத்தாவுக்காக 16 வருட சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 31வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் ஆரம்பத்திலேயே 10 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் எதிர்புறம் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரேன் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்த இளம் வீரர் அங்ரிஷ் ரகுவன்சி 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 (18) ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய சுனில் நரேன் 29 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

அசத்தல் சாதனை:
அப்போது வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 (7) ரன்களில் அவுட்டானார். அதே போல அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் 13 (10) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து எதிர்ப்புறம் தொடர்ந்து ராஜஸ்தான் பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்ட சுனில் நரேன் சதமடித்து 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் 109 (56) குவித்து ஆட்டமிழந்தார்.

கடந்த 2011 முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் இதுவரை 503 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் பெரும்பாலும் தம்முடைய கேரியரில் டெயில் எண்டராக கீழ் வரிசையில் மட்டுமே விளையாடி வந்த அவர் தற்போது தம்முடைய வாழ்நாளில் முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணிக்காக 16 வருடங்கள் கழித்து சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட முதல் வருடத்தின் முதல் போட்டியிலேயே பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா அணிக்காக நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் அடித்திருந்தார். இது போக கொல்கத்தா அணிக்காக ஏற்கனவே சுனில் நரேன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க.. விராட் கோலி நிலைமையை கண்டு வருத்தத்தில் ரசிகர்கள் – நடந்தது என்ன?

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா, ஷேன் வாட்சன் ஆகியோருக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகள் மற்றும் சதத்தை பதிவு செய்த 3வது வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ரிங்கு சிங் 20* (9) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் கொல்கத்தா 223/5 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Advertisement